இந்தியா

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன: ராம்நாத் கோவிந்த்

7th Sep 2019 01:57 AM

ADVERTISEMENT


தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பணிகளில் சிறந்து செயல்படுவோருக்கான விருது வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறந்த பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாம் அடைந்த சாதனைகளைப் பல நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன. நமது நடவடிக்கைகளிலிருந்து அந்நாடுகள் பாடம் கற்று வருகின்றன. நமது அனுபவங்களை அந்நாடுகளுடன் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாட்டில், 70 நாடுகள் பங்கேற்றன. தூய்மை இந்தியா போன்ற திட்டத்தைச் செயல்படுத்த அந்நாடுகள் ஆர்வமுடன் உள்ளன.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 55 கோடிக்கும் அதிகமான மக்கள், திறந்தவெளிக் கழிப்பு பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர். இதனால், அவர்களின் வாழ்வில் பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. வரும் அக்டோபர் மாதத்துக்குள் 100 சதவீதம் திறந்தவெளிக் கழிப்பு இல்லா நாடாக மாறுவதற்கு அரசு உறுதி கொண்டுள்ளது.
நடப்பு ஆண்டில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில் 25 கோடி பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழாவுக்காக 1.20 லட்சம் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள், அரசு மேற்கொண்டிருந்த சுகாதார நடவடிக்கைகளைப் பாராட்டினர். சுகாதாரம் தொடர்பாக ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் (2030-ஆம் ஆண்டு) இந்தியா அடைந்துவிடும் என்றார் ராம்நாத் கோவிந்த்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT