இந்தியா

திகார் சிறை சென்றவர்களில் சிலர்...

7th Sep 2019 01:45 AM

ADVERTISEMENT

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு 14 நாள் நீதிமன்றக் காவலை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதையடுத்து, தில்லியிலுள்ள திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். 
அரசியல் வட்டாரத்தில் முக்கியப் பிரமுகரான ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அந்தச் சிறை மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தச் சிறை குறித்தான தகவல்கள் பலவற்றை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர். 

ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முதல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வரை பல்வேறு நபர்களை திகார் சிறை தனது வரலாற்றில் கண்டுள்ளது. அவர்களுள் சிலர் குறித்த தகவல்கள் பின்வருமாறு:

சஞ்சய் காந்தி
சஞ்சய் காந்தி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன்; ராஜீவ் காந்தியின் இளைய சகோதரர். நாட்டில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, இந்திரா காந்தி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறப்பட்ட திரைப்படம் ஒன்றின் படச்சுருள்களை எரித்ததாக சஞ்சய் காந்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 30 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட சஞ்சய் காந்தி, கடந்த 1979-ஆம் ஆண்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

லாலு பிரசாத்
பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவருமான லாலு பிரசாத், கால்நடைத் தீவன ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டு, திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சுரேஷ் கல்மாடி
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்தவர் ஆவார். தில்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுகளில் ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணையின்போது, கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் நீதிமன்றத்தால் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அண்ணா ஹசாரே
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ஊழலுக்கு எதிராக சட்டமியற்றக் கோரி ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயரில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

அரவிந்த் கேஜரிவால்
பாஜக முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், கடந்த 2014-ஆம் ஆண்டு நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அமர் சிங்
சமாஜவாதி கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவர், அமர் சிங். கடந்த 2008-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் நோக்கில், பாஜக எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கியதாக அமர் சிங் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். 

மில்கா சிங்
முன்னாள் தடகள வீரரும், காமன்வெல்த் விளையாட்டுகளில் தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கம் வென்றவருமான மில்கா சிங், ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த குற்றச்சாட்டுக்காக அவருடைய இளம் வயதில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மக்பூல் பட்
ஜம்மு-காஷ்மீர் தனி நாடாக இயங்கும் வகையில் சுதந்திரம் கோரிப் போராடிய பிரிவினைவாதத் தலைவரான மக்பூல் பட், கடந்த 1976-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர், 1984-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திகார் சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

சுப்ரதா ராய்
சஹாரா இந்தியா பரிவார் குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய், அந்நிறுவனத்தின் சொத்துகளை விற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

குர்மீத் ராம் ரஹீம் சிங்
பெண் சீடர்கள் இருவரைத் தனது ஆசிரமத்தில் பாலியல் தொந்தரவுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக, தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சோட்டா ராஜன்
பல்வேறு கொலை வழக்குகளிலும், கடத்தல் வழக்குகளிலும் குற்றஞ்சாட்டப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜன், கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதையடுத்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT