இந்தியா

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலிடம் அமலாக்கத் துறை விசாரணை

7th Sep 2019 01:35 AM

ADVERTISEMENT


அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியது தொடர்பான வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலிடம் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர். மும்பையில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மும்பையில் நரேஷ் கோயலின் இல்லம், அவரது அலுவலகம், தில்லியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம், நிறுவனத்தின் இயக்குநர்களுக்குச் சொந்தமான வீடுகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, நரேஷ் கோயலிடம் முதல் முறையாக தற்போது விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
நரேஷ் கோயல் 19 பதிவு பெறாத நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் 5 நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டவை. அந்த நிறுவனங்களுக்கு இடையே பொருள்களை விற்பனை செய்வது, வாங்குவது, நிறுவனத்துக்காக செலவு செய்வது என சந்தேகத்துக்கு இடமான வகையில் பணப் பரிமாற்றம் நடந்ததாகத் தெரிகிறது. மேலும், அதிக தொகையை செலவு செய்ததால், அந்த நிறுவனங்கள் பெரிய அளவில் இழப்பைச் சந்தித்துள்ளதாக போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ள வரவு-செலவு கணக்கு விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் ஆதாரங்கள் கிடைக்குமானால், நரேஷ் கோயல் உள்ளிட்டோர் மீது கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நரேஷ் கோயல் கடந்த மார்ச் மாதம் தனது பொறுப்பில் இருந்து விலகினார். முழு வீச்சுடன் இயங்கி வந்த அந்த விமான போக்குவரத்து நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்திக் கொண்டது.
தற்போது, திவால் சட்டத்தின் கீழ், அந்த விமான நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்து, வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT