இந்தியா

கொள்ளையர்களிடம் உடைமைகளை பறிகொடுத்த ரயில் பயணிக்கு ரூ.2.37 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் ஆணையம் உத்தரவு

7th Sep 2019 01:37 AM

ADVERTISEMENT


ரயிலில் கொள்ளையர்களிடம் உடைமைகளை பறிகொடுத்த பயணிக்கு ரூ.2.37 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.
கோவாவிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் நகருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ரயிலில் பயணம் செய்த ரஜு தேவி சூர்யவன்ஷி என்ற பயணி, தனது உடைமைகள் திருடுபோனதாகவும், ரயில்வே காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கோரி தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தை அணுகினார்.
அவரது புகாரில், தன்னிடம் இருந்த 2 பைகள் காணாமல் போனது. அதில், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களும், ரூ.20ஆயிரமும் இருந்தன.
முன்பதிவு செய்து ரயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்தேன். திடீரென எனது பைகள் காணாமல் போய்விட்டது. இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தேன். அதைத்தொடர்ந்து, ரயில்வே காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தேன். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கு 12 சதவீத வட்டியுடன் உரிய இழப்பீட்டை அளிக்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை விசாரித்த தேசிய குறைதீர்ப்பு ஆணையத் தலைவர் ஆர்.கே.அகர்வால், ஆணையத்தின் உறுப்பினரான எம்.ஷெரீஷா ஆகியோர் 12 சதவீத வட்டியை 6 சதவீதமாகக் குறைத்து, ரூ.2.37 லட்சத்தை இழப்பீடாக சூர்யவன்ஷிக்கு வழங்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT