இந்தியா

காந்தி ஜயந்தி: அமெரிக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்

7th Sep 2019 01:41 AM

ADVERTISEMENT


மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அடுத்த மாதம் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்கவிருக்கிறார்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் மற்றும் அமெரிக்க சமூக நீதியாளர் மார்ட்டின் லூதர் கிங்கின் 90-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வாஷிங்டனில் மாபெரும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகம் நடத்துகிறது. இதில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்க  நாடாளுமன்றத்தின் கீழவைத் தலைவர் நான்சி பெலோசியும் பங்கேற்கின்றனர்.
அவர்களைத் தவிர, முக்கிய அமெரிக்க எம்.பி.க்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றுப் புகழ்மிக்க நாடாளுமன்ற நூலக வளாகத்தில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நான்சி பெலோசி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ளவிருக்கிறார்.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்தியத் தூதரகம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 15-ஆம் தேதி மகாத்மா காந்தி பற்றிய கண்காட்சியை தூதரகம் நடத்தியது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT