இந்தியா

விமானப்படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்

4th Sep 2019 04:37 AM

ADVERTISEMENT


இந்திய விமானப் படையில் அதிநவீன அப்பாச்சி ஏஹெச்-64இ ரகத்தைச் சேர்ந்த 8 ஹெலிகாப்டர்கள் செவ்வாய்க்கிழமை இணைக்கப்பட்டன.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து அப்பாச்சி ஏஹெச்-64இ ரகத்தைச் சேர்ந்த 22 ஹெலிகாப்டர்களை வாங்குவது தொடர்பாக இந்தியா கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்தது. இதேபோல், மேலும் 6 அப்பாச்சி ஏஹெச்-64இ ரக ஹெலிகாப்டர்களை ரூ.4,168 கோடிக்கு வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டமாக 8 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் போயிங் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அளித்தது.
இந்த ஹெலிகாப்டர்களை, இந்திய விமானப் படையில் இணைக்கும் நிகழ்ச்சி, பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப் படைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விமானப் படைத் தலைமை தளபதி பி.எஸ்.தனோவா உள்ளிட்ட மூத்த தளபதிகள் கலந்துகொண்டனர். அவரது முன்னிலையில் 8 ஹெலிகாப்டர்களும் விமானப் படையில் சேர்த்து கொள்ளப்பட்டன. தொடர்ந்து, வானில் அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் சாகச அணிவகுப்பு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பி.எஸ்.தனோவா அளித்த பேட்டியில், நவீன தொழில்நுட்பத்துடன் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை சேர்த்திருப்பது, இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் நடவடிக்கையில் மிகவும் முக்கியமான கட்டமாகும். இந்த ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப் படையின் தாக்குதல் திறனை மேலும் அதிகரிக்கும். இந்தியாவின் மேற்குப் பிராந்தியத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படும். இந்திய விமானப் படையில் இருக்கும் எம்.ஐ.35 ஹெலிகாப்டர்களுக்கு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மாற்றாக அமையும். ஒப்பந்தப்படி, இந்தியாவுக்கு அளிக்க வேண்டிய எஞ்சிய ஹெலிகாப்டர்களை, போயிங் நிறுவனம் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒப்படைக்கும் என்றார்.

போயிங் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020-ஆம் ஆண்டுக்குள் இந்திய விமானப் படையிடம் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் அளிக்கப்பட்டு விடும். அப்பாச்சி ஏஹெச்-64இ ரக ஹெலிகாப்டர்களில் நவீன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; இதுதான் உலகின் மிகச்சிறந்த தாக்குதல் ரக ஹெலிகாப்டர் ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் அதிநவீன தாக்குதல் ரக ஹெலிகாப்டராகக் கருதப்படும் அப்பாச்சி, அமெரிக்க விமானப் படையில் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அப்பாச்சி ரகத்தைச் சேர்ந்த சுமார் 2,200 ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியிலுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் பயங்கரவாதப் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப் படை விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தின. 
இந்த சூழ்நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு, கூடுதல் தாக்குதல் திறனுடைய அப்பாச்சி ஏஹெச்-64இ ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT