இந்தியா

வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரதுல் புரிக்கு நீதிமன்றக் காவல்

4th Sep 2019 01:18 AM

ADVERTISEMENT


வங்கிக் கடன் மோசடி வழக்கில், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ரதுல் புரியை செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து மோசர் பேர் நிறுவனத்துக்காக, ரதுல் புரியும், அவரது குடும்பத்தினரும் ரூ.354 கோடி கடன் வாங்கினர். அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று வங்கி நிர்வாகம் சார்பில் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், ரதுல் புரி, அவரது தந்தையும், மோசர் பேர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான தீபக் புரி, மற்றொரு இயக்குநர் நீதா புரி ( இவர் ரதுல் புரியின் தாயார் மற்றும்  கமல்நாத்தின் சகோதரி ஆவார்) மற்றும் சஞ்சய் ஜெயின், வினீத் சர்மா ஆகிய 5 பேருக்கு எதிராகவும், மோசர் பேர் நிறுவனத்துக்கு எதிராகவும் சிபிஐ கடந்த மாதம் 17-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், ரதுல் புரிக்கு எதிராக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது.
வழக்கு விசாரணைக்காக, ரதுல் புரியை அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 20-ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, 26-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், அவரது காவலை 4 நாள்கள் நீட்டித்து அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் கர்க் முன்னிலையில் ரதுல் புரி செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ரதுல் புரியின் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர முறைகேட்டில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேட்டிலும் ரதுல் புரி மீது குற்றச்சாட்டு உள்ளது. அந்த வழக்கில் அவரது முன்ஜாமீன் மனு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடியில் சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த பலருக்கு கோடிக்கணக்கில் அந்த நிறுவனம் லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் கிறிஸ்டியன் மிஷெல், ரதுல் புரி மூலமாக லஞ்சப் பணத்தை பகிர்ந்தளித்ததாக சந்தேகத்தின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT