இந்தியா

ம.பி. காங்கிரஸுக்கு புதிய தலைவரை சோனியா காந்தி தேர்வு செய்வார்

4th Sep 2019 02:33 AM

ADVERTISEMENT


மத்தியப் பிரதேச காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்? என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்வார் என்றும் அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்கும் என்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த கமல்நாத், கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பதவியுடன் கட்சித் தலைவர் பொறுப்பையும் கவனிப்பது சிரமமாக இருப்பதாக அவர் கட்சி மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தார். எனவே, கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இந்தச் சூழலில், மாநிலத் தலைவர் பதவியைப் பெற கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா விரும்புவதாகக் கூறப்படுகிறது. மேலும், அப்பதவியில் தன்னை மேலிடம் நியமிக்கா விட்டால் காங்கிரஸை விட்டு வெளியேறும் முடிவைக் கூட அவர் எடுக்க வாய்ப்புள்ளதாக மத்தியப் பிரதேச அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் எழுந்துள்ளன.
மொத்தம் 230 எம்எல்ஏ பலம் கொண்ட மாநில சட்டப் பேரவையில் கமல்நாத் அரசுக்கு நூலிழைப் பெரும்பான்மை மட்டுமே உள்ளது. அவரது அரசை பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிகளின் சில எம்எல்ஏக்களும், சில சுயேச்சைகளும் ஆதரித்து வருகின்றனர். அங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கணிசமான எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவு ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு அங்கு வெற்றி பெற்றபோது அவரே முதல்வராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கட்சி மேலிடம் மூத்த தலைவரான கமல்நாத்தை முதல்வராகத் தேர்வு செய்தது.
இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டி குறித்து ஜோதிராதித்ய சிந்தியாவிடம் குவாலியர் நகரில் செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து சோனியா காந்தி முடிவெடுப்பார். இது பற்றி நான் அவருடன் பேசினேன். இந்த விவகாரத்தில் மேலிடம் எடுக்கும் முடிவு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும்  என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT