இந்தியா

போக்குவரத்து விதிகளை மீறியதாகரூ. 23,000 அபராதம்!

4th Sep 2019 01:29 AM

ADVERTISEMENT


எந்தவித ஆவணங்களுமின்றி பயணம் செய்த தில்லியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிக்கு, புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, குருகிராம் போக்குவரத்து போலீஸார் ரூ. 23 ஆயிரத்தை அபராதமாக விதித்துள்ளனர். அந்த வாகனத்தின் மதிப்பே ரூ. 15 ஆயிரம்தான் என அந்த வாகன ஓட்டி தெரிவித்தார்.
குருகிராமில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த குருகிராம் போக்குவரத்து போலீஸார், ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கிழக்கு தில்லி கீதா காலனியைச் சேர்ந்த தினேஷ் மதனை தடுத்து விசாரித்தனர். அப்போது அவர் எந்தவித ஆவணங்களையும் வைத்திருக்காத காரணத்தால் அவருக்கு ரூ. 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
இந்தச் சம்பவம் குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடர்பாளர் சுபாஷ் போகன் கூறுகையில், வாகனப் பதிவு, காப்பீடு, ஓட்டுநர் உரிமம், மாசு கட்டுப்பாட்டு ஆகிய சான்றிதழ்கள் எதையும் தினேஷ் மதனால் கொடுக்க முடியவில்லை. ஆகையால், வாகனப் பதிவு சான்றிதழ் இல்லாததற்கு ரூ. 5 ஆயிரம், ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு ரூ. 5 ஆயிரம், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாததற்கு ரூ. 10 ஆயிரம், மூன்றாம் நபர் காப்பீடு இல்லாததற்கு ரூ. 2 ஆயிரம், தலைக்கவசம் அணியாததற்கு ரூ. 1,000 என மொத்தம் ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.
இதுகுறித்து தினேஷ் மதன் கூறுகையில், தலைக்கவசம் அணியவில்லை என்று போலீஸார் என்னைப் பிடித்தனர். அப்போது என்னிடம் வாகனப் பதிவுச் சான்றிதழ் இல்லை. என்னுடைய வாகனத்தின் சாவியைத் தரும்படி அவர்கள் கூறினார். நான் மறுக்கவே உடனடியாக ரூ. 23 ஆயிரத்துக்கான அபராத சலானைப் பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர். எனது வாகனத்தின் பதிவுச் சான்றிதழை வாட்ஸ் ஆப் மூலம் வீட்டில் இருந்து கேட்டுப் பெற்றேன். அதற்குள் அபராதத் தொகை பதிவு செய்யப்பட்டுவிட்டது. இந்தத் தொகையைக் குறைக்க வேண்டும். இனிமேல் நான் உரிய ஆவணங்களுடன் பயணம் செய்வேன். எனது வாகனத்தின் மதிப்பே ரூ. 15 ஆயிரம்தான் என்றார்.
இதுகுறித்து பதிலளித்த செய்தித்தொடர்பாளர் சுபாஷ் போகன், ஏராளமான வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்களுடன் பயணம் செய்வதில்லை. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மதனின் அபராதத் தொகை குறைக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT