இந்தியா

பில் கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடிக்கு விருது!

4th Sep 2019 01:20 AM

ADVERTISEMENT


தூய்மை இந்தியா திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பான பங்களிப்புக்காக, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளைத் தங்கள் நாட்டிலோ அல்லது பல்வேறு நாடுகளிலோ வெற்றிகரமாகச் செயல்படுத்தும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு சர்வதேச இலக்காளர் விருதை பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த இலக்கை அடைவதற்கு பிரதமர் மோடி அளித்த பங்களிப்புக்காக இந்த ஆண்டுக்கான விருது, அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 24-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள புளூம்பர்க் சர்வதேச வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 
இதையடுத்து, நியூயார்க் நகரில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அங்கு உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார். கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை மாநாட்டில் அவர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT