இந்தியா

பிரமாணப் பத்திரத்தில் மோசடி: அஜித் ஜோகியின் மகன் கைது

4th Sep 2019 01:17 AM

ADVERTISEMENT


தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் மோசடி செய்தது தொடர்பான விவகாரத்தில், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டு சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் மர்வாஹி தனித் தொகுதியில் அமித் ஜோகியும், பாஜக வேட்பாளர் சமீரா பைக்ராவும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் அமித் ஜோகி வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் சமீரா பைக்ரா தோல்வியடைந்தார்.
இந்நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அமித் ஜோகி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது பிறந்த இடம் குறித்து பொய்யான தகவலை அளித்ததாக பைக்ரா குற்றம்சாட்டினார். பிரமாணப் பத்திரத்தில் அமித் ஜோகி, சர்பாகராவில் பிறந்ததாக தெரிவித்துள்ளார், ஆனால் அவர் பிறந்தது அமெரிக்காவில் என்று பைக்ரா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்திஸ், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் அமித் ஜோகியின் ஜாதி, பிறந்த இடம் குறித்து கேள்வியெழுப்பி அவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதை விசாரித்த உயர்நீதிமன்றம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து, அதன் பதவிக்காலமும் (2013 முதல் 2018) முடிந்து விட்டதை சுட்டிக்காட்டி, அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து பிலாஸ்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பைக்ரா புகார் அளித்தார். இதையடுத்து பைக்ராவின் புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அமித் ஜோகியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து பிலாஸ்பூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் கூறுகையில், பிலாஸ்பூரில் உள்ள மர்வாஹி சதன் அலுவலகத்தில் அமித் ஜோகி கைது செய்யப்பட்டார்.
கௌரேலா காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 420, 467, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார்.
அஜித் ஜோகி கண்டனம்: அஜித் ஜோகி தற்போது ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜே) எனும் கட்சியின் தலைவராக உள்ளார். தன் மகன் அமித் ஜோகியை போலீஸார் கைது செய்திருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பகேல் தலைமையில் காட்டாட்சியே நடைபெறுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, என் மகன் போலி வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். என் மகனுக்கு ஆதரவாக சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படியிருக்கையில் அவரைக் கைது செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். இதிலிருந்து நீதித்துறையைக் காட்டிலும் தாம் மிகவும் உயர்ந்தவர் என முதல்வர் பூபேஷ் பகேல் காட்ட முயற்சிப்பது தெரிகிறது என்றார்.
முன்னதாக, அஜித் ஜோகியின் எஸ்.டி. (பட்டியல் பழங்குடியினத்தவர்) ஜாதிச் சான்றிதழை மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு அண்மையில் தள்ளுபடி செய்தது. போலியாக அந்தச் சான்றிதழை பெற்றதாக அஜித் ஜோகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT