இந்தியா

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா - ஜப்பான் உறுதி

4th Sep 2019 01:32 AM

ADVERTISEMENT


பாதுகாப்புத் துறையில் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்த, இந்தியாவும் ஜப்பானும் உறுதிபூண்டுள்ளன. 
கிழக்கு ஆசிய நாடுகளுடனான பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் 5 நாள்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு திங்கள்கிழமை சென்ற ராஜ்நாத் சிங், அந்நாட்டு பிரதமர் ஷின்úஸா அபே, பாதுகாப்புத் துறை அமைச்சர் தகேஷி இவாயா ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இரு நாடுகள் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்திர உச்சி மாநாடு இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக, இரு நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்துவதென மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் தொடங்கி அடுத்தமாத தொடக்கம் வரை, ஜப்பான்-இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப் பயிற்சி நடத்தப்படும்.
இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது, ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானதாகும். இந்த விவகாரம் தொடர்பாக இரு அமைச்சர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். கொரிய தீபகற்பம், தென்சீன கடல் பகுதியில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், இருநாடுகளின் விமானப் படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் வளம் நிறைந்த தென்சீன கடல் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு, வியத்நாம், பிலிப்பின்ஸ், புருணே உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT