இந்தியா

பாகிஸ்தானில் சீக்கியப் பெண் கட்டாய மதமாற்றம்: நடவடிக்கை எடுக்க அமித் ஷாவிடம் அமரீந்தர் வேண்டுகோள்

4th Sep 2019 01:30 AM

ADVERTISEMENT


பாகிஸ்தானில் அண்மையில் சீக்கியப் பெண், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டதுடன், கட்டாயப்படுத்தி மதமாற்றமும் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குருத்வாராவின் நிர்வாகி ஒருவரது மகளை முஸ்லிம் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று, கட்டாயத் திருமணம் செய்துள்ளார். பின்னர், அந்தப் பெண்ணை மத மாற்றமும் செய்துள்ளார். இதுதொடர்பான விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் இந்தியாவில் குறிப்பாக சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாபில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக சீக்கியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமரீந்தர் சிங் இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாகிஸ்தானில் சீக்கியப் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து ஏற்கெனவே மத்திய அரசிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தேன். இப்போது, உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். இது மிகவும் கவலைக்குரிய பிரச்னை. பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களுக்கு அந்நாட்டு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
மேலும் ஒரு சம்பவம்: இதனிடையே, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு, முஸ்லிம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஹிந்து பஞ்சாயத்து அமைப்பு இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ரேணுகா குமார் என்ற அந்த பெண் கடந்த 29-ஆம் தேதி கடத்தப்பட்டுள்ளார். கல்லூரியில் படித்து வந்த அந்த மாணவியை சக முஸ்லிம் மாணவர்களே கடத்திச் சென்று மதமாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக அப்பெண்ணின் சகோதரர்  புகாரளித்தும், பாகிஸ்தான் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT