இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாதுகாப்பு: அமித் ஷா வாக்குறுதி

4th Sep 2019 01:27 AM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளின் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரிலுள்ள பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 20 பேர்அடங்கிய குழுவினர் அமித் ஷாவை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து அமித் ஷாவிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். இந்தச் சந்திப்பு தொடர்பாக குப்வாரா பஞ்சாயத்து தலைவர் மீர் ஜுனைத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் குறைந்தபட்சம் 5 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என அமித் ஷா வாக்குறுதி அளித்தார். பஞ்சாயத்து தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கெளரவ ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாயத்து தலைவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும்படி அவரிடம் கோரிக்கை விடுத்தோம். பின்னர், பயங்கரவாதிகளால் தாக்கப்பட வாய்ப்புள்ள பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பாதுகாப்பு வழங்கும் என்று அமித் ஷா உறுதியளித்தார். ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பிறகு, மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளதால், அங்குள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். சிறப்பு அந்தஸ்தானது முஃப்திகளுக்கும், அப்துல்லாக்களுக்கும் மட்டுமே சாதகமாக இருந்து வந்தது. ஜம்மு-காஷ்மீரிலுள்ள 316 வட்டாரங்களுக்கும் இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என அமித் ஷா உறுதியளித்தார் என்றார் மீர் ஜுனைத்.
கட்டுப்பாடுகள் தளர்வு: ஸ்ரீநகர் மாவட்டத்திலுள்ள ஹார்வன் பஞ்சாயத்து தலைவர் ஜுபேர் நிஷாத் பட் கூறுகையில், பஞ்சாயத்து தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கப்படும் என அமித் ஷா உறுதியளித்தார். செல்லிடப்பேசி சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த 15 முதல் 20 நாள்களில் நீக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார் என்றார்.
முழு ஒத்துழைப்பு: உள்துறை அமைச்சருடனான சந்திப்பின்போது, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கும் உடனிருந்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பரம்பரை ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அங்கு அடிமட்ட அளவில் புதிய தலைவர்கள் உருவாகி வருகின்றனர். மத்திய அரசின் நிதியுதவிகள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாகச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை ஜம்மு-காஷ்மீரில் நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என பஞ்சாயத்து தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என அமித் ஷா அவர்களிடம் வாக்குறுதி அளித்தார் என்றார் ஜிதேந்திர சிங். 

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநருடன் அமித் ஷா சந்திப்பு
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகனை, அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய விவகாரத்தில், மூத்த தலைவர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகனை அமித் ஷா, ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது, ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து ஜக்மோகனிடம் அவர்கள் விளக்கமளித்தனர். ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்தும் ஜக்மோகனிடம் அவர்கள் கேட்டறிந்தனர். 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில், ஜக்மோகன் அமைச்சராகவும் இருந்தார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கு எதிராக ஜக்மோகன் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT