இந்தியா

சின்மயானந்த் மீதான பாலியல் புகார் விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

4th Sep 2019 01:18 AM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அந்த மாநில அரசு அமைத்துள்ளது. 
சின்மயானந்த் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக, அவரது அறக்கட்டளை சார்பில் இயங்கி வந்த சட்டக் கல்லூரியில் பயின்ற மாணவி, சமூக வலைதளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக, அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஷாஜகான்பூர் காவல் துறையினர் கடந்த மாதம் 27-ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்தப் பிரச்னையை தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், கல்லூரி மாணவி அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு விசாரணைக் குழுவை உத்தரப் பிரதேச அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு செவ்வாய்க்கிழமை அமைத்தது. காவல்துறைத் தலைவருக்கு (ஐஜி) நிகரான தகுதியுடைய நபரை இந்தக் குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும்; இக்குழுவில், காவல் துறைக் கண்காணிப்பாளர் ஒருவரும் இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அலாகாபாத் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்படவுள்ள தனி அமர்வின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நடைபெற உள்ளது. 
சின்மயானந்த் தலைமறைவு: இதனிடையே, காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக சின்மயானந்திடம் விசாரணை நடத்த, ஹரித்துவாரிலுள்ள அவரது ஆசிரமத்துக்கு காவல் துறையினர் சென்றனர். ஆனால், அந்த ஆசிரமத்தில் அவர் இல்லாததால், அவர்கள் விசாரணை நடத்தாமல் திரும்பினர். புகாரளித்த மாணவியும், அவரது குடும்பத்தினரும் தில்லியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும், உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூரிலுள்ள அவர்களது வீட்டுக்கு வெளியேயும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT