இந்தியா

கேரளத்தில் வெள்ளத்தால் இடிந்த பாலத்தை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் பினராயி விஜயனிடம் ராகுல் கோரிக்கை

4th Sep 2019 01:15 AM

ADVERTISEMENT


கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இடிந்த பாலத்தை மீண்டும் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயனுக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியாறு நதிக்கு இருபுறமும் அமைந்துள்ள குரும்பிலாங்கோடு மற்றும் சுங்கதாரா கிராமங்களை இணைக்கும் கைப்பினிகடவு பாலம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இடிந்து விழுந்து விட்டது. இதனால் இந்த இரு கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டதோடு, அவர்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டும் வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை விரைந்து சீரமைக்குமாறு இரு கிராம மக்களும் கோரியுள்ளனர்.
எனவே, கைப்பினிகடவு பாலத்தை விரைவில் மறுநிர்மாணம் செய்யுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன். அப்பாலம் கட்டி முடிக்கப்படும் வரை இரு கிராம மக்களுக்கும் உதவும் வகையில் தற்காலிகப் பாலம் ஒன்றை அமைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மத்திய பழங்குடி இனத்தவர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: எனது மக்களவைத் தொகுதியான வயநாட்டில் பெருமளவில் பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். காடர்கள், காட்டுநாயக்கர்கள் போன்ற பழங்குடியினரின் வசிப்பிடமாக வயநாடு உள்ளது. இங்குள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்திருந்த பழங்குடி இனத்தவரின் குடியிருப்புகள் அனைத்தும் அண்மையில் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் முற்றிலுமாக சீரழிந்து விட்டன. அவர்களின் நிலங்கள் இனி விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் வயநாடு தொகுதியில் நான் பயணம் மேற்கொண்டிருந்தபோது பல்வேறு பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் என்னைச் சந்தித்தனர். அப்போது வெள்ள நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கவும், மறுவாழ்வுத் திட்டத்துக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். பழங்குடி இனத்தவரின் எளிய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த முயற்சியில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுக்கும் கேரள மாநில அரசுக்கும் சீரான ஒத்துழைப்பை ஏற்படுத்திச் செயல்பட மத்திய பழங்குடி இனத்தவர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு மத்திய அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கேரளம் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலைமையை ஆராய உள்ளதாக அறிகிறேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பழங்குடியின பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடினத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு திறன் மேம்பாட்டுக்கும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தை ஏற்படுத்தவும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி கோரியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT