இந்தியா

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது: உத்தரகண்ட் உயர்நீதிமன்றம்

4th Sep 2019 01:21 AM

ADVERTISEMENT


குற்றச்சாட்டிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் உரிமையை குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது என்று உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரைக் கொலை செய்ததாக வினோத் குமார் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணையில், வினோத் குமார் சார்பில் வாதிட குல்தீப் அகர்வால் என்ற வழக்குரைஞர் ஒப்புக்கொண்டார். ஆனால், வழக்குரைஞரைக் கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக எந்த வழக்குரைஞரும் வாதிடக் கூடாது என்று கோட்துவார் வழக்குரைஞர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானம் அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டதா என்பதை ஆராயும்படி, பொதுநல மனுவை உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் குல்தீப் அகர்வால் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன், நீதிபதி அலோக் குமார் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது. 
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தங்களைக் காத்துக் கொள்வதற்கான உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இதை யாரும் தடுக்க முடியாது. குறிப்பிட்ட நபர்களுக்கு ஆதரவாக வாதிடுவதைத் தடுக்கும் இதுபோன்ற சட்டவிரோத தீர்மானங்களைத் தடுக்கும் உரிமை, உத்தரகண்ட் பார் கவுன்சிலுக்கு உள்ளது.
வழக்குரைஞர் கொலையுண்ட வழக்கு தொடர்பாக, கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தலாம். அதற்குத் தடை ஏற்படுத்தும் கோட்துவார் வழக்குரைஞர் சங்கம் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் மாவட்ட நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்குரைஞர் குல்தீப் அகர்வாலுக்கு தொந்தரவு ஏற்படுத்திய குற்றத்துக்காக, கோட்துவார் வழக்குரைஞர் சங்கம் அவருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT