இந்தியா

காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பகல்நேர கட்டுப்பாடுகள் நீக்கம்

4th Sep 2019 01:23 AM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பகல்நேர கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், சந்தைகள், கடைகள் திறக்கப்படாததால் தொடர்ந்து 30-ஆவது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காஷ்மீர் பள்ளத்தாக்கின் 90 சதவீத இடங்களுக்கும் மேல் பகல்நேர கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்கள் அகற்றப்பட்டன. எனினும், பாதுகாப்பு கருதி, ரோந்துப் பணியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குப்வாரா மற்றும் ஹந்த்வாரா ஆகிய இடங்களில் செல்லிடப்பேசி மற்றும் இணையச் சேவைகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டன. மற்ற இடங்களில் செல்லிடப்பேசி சேவைகள் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தொலைபேசி சேவைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. 
அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனினும், தங்களது சொந்த வாகனங்களில் பலர் அலுவலகத்துக்கு சென்றனர். வாடகைக் கார்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டன. சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அதனால் தொடர்ந்து 30 ஆவது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலங்களும் வழக்கம் போல இயங்கின. பணியாளர்கள் வருகையும் கடந்த நாள்களை விட அதிக அளவில் இருந்தது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் வருகை அதிகரித்திருந்தாலும், சில இடங்களில், மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது என்று அதிகாரிகள் கூறினர்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு கடந்த மாதம் நடவடிக்கை மேற்கொண்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு-காஷ்மீரில் கடந்த மாதம் 5-ஆம் தேதி கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. அவை தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
கல்வீச்சில் ஒருவர் காயம்: இதனிடையே, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற கல்வீச்சில் ஒருவர் காயமடைந்தார். இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புல்வாமா மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கல்வீச்சுத் தாக்குதலில், முகமது யாசின் பட் (30) என்பவர் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT