இந்தியா

கர்தார்பூர் வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு விமான நிலையத்தில் விசா

4th Sep 2019 01:26 AM

ADVERTISEMENT


கர்தார்பூர் யாத்திரைக்காக பாகிஸ்தான் வரும் இந்திய அல்லது வெளிநாட்டு சீக்கிய பக்தர்களுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதி (ஆன் -அரைவல் விசா) ஏற்பாடு செய்யப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் சாலை வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். இந்நிலையில், விமானம் மூலமாக பாகிஸ்தான் வரும் சீக்கிய பக்தர்களுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்குவதாக இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச சீக்கிய மாநாடு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பஞ்சாப் மாகாண ஆளுநர் செளதிரி சர்வார், அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பிரதமர் இம்ரான் கான் பேசியதாக செவ்வாய்க்கிழமை வெளியான நியூஸ் இன்டர்நேஷனல் செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளதாவது:
முஸ்லிம் மக்களுக்கு மெக்கா, மதீனா எவ்வாறு புனிதத் தலங்களோ, அதுபோல, சீக்கிய மக்களுக்கு நன்கானா சாஹிப்பும், கர்தார்பூரும் உள்ளன. முஸ்லிம் ஒருவரை புனிதத் தலங்களுக்கு செல்லவிடாமல் தடுப்பது குறித்து எங்களால் யோசிக்கக் கூட முடியாது. அதுபோலதான், சீக்கியர்களை நாங்கள் தடுக்க இயலாது. பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவது பாகிஸ்தானின் கடமை. 
அவர்களுக்கு பலமுறை வந்து செல்லும் வசதியுடைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விசாவை இந்திய பக்தர்களும், வெளிநாட்டு பக்தர்களும் விமான நிலையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். விசா நடைமுறைகள் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிவடையும். 
விசா வழங்குவதில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், தொடக்கத்தில் சில தவறுகள், தடங்கல்கள் இருக்கலாம். எனினும், சீக்கிய பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்று இம்ரான் கான் கூறியதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கர்தார்பூர் வழித்தடத்தை பக்தர்களின் பயன்பாட்டுக்குத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT