இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளைவரை நீட்டிப்பு

4th Sep 2019 01:26 AM

ADVERTISEMENT


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வியாழக்கிழமை (செப்.5) வரை நீட்டித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்த வழக்கில், கடந்த மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை, சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்து, தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர், சிபிஐ காவல் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. 
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளுக்கு எதிராகவும், தனக்கு எதிராக பிணையில் வெளிவர இயலாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்தும் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள்  ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது.
அப்போது, சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ப.சிதம்பரத்தை மேற்கொண்டு காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை இல்லை என்றார்.
இந்த விவகாரத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, நீதிமன்றக் காவலில் சிறைக்கு செல்வதற்கு பதிலாக, வீட்டுக் காவலில் இருக்க ப.சிதம்பரம் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
அதனைக் குறிப்பிட்ட துஷார் மேத்தா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், நீதிமன்ற காவலில் சிறைக்கு செல்ல விருப்பமில்லை என்று கூற முடியாது. இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தங்களது மனு மீது அன்றைய தினமே நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று அவரது தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தின் மனு மீது 24 மணிநேரத்துக்குள் பதிலளிக்கும்படி, சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அவர் கைதாகி 13 நாள்களுக்கு பிறகு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது பதிலளிக்க, 24 மணிநேரத்துக்கும் குறைவான அவகாசமே அளிக்கப்பட்டது. அவரது சிபிஐ காவலை மேலும் நீட்டிக்க நாங்கள் கோரவில்லை. எனவே, சட்டரீதியிலான அடுத்தகட்ட நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், ப.சிதம்பரம் நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டால், இந்த மனுவே பயனற்றதாகிவிடும் என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், ப.சிதம்பரத்தின் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை செப்.5-ஆம் தேதிக்கு பட்டியலிடுகிறோம். அன்றையே தினமே உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் தொடர வேண்டும். இந்த விவகாரத்தில் கடந்த திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் செய்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றனர்.
மேலும், செப்.5-ஆம் தேதி வரை, இடைக்கால ஜாமீன் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் அழுத்தம் தர வேண்டாம் என்று சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றத்தின் அதிகாரத்தை கைப்பற்றக் கூடாது என்பதில் கவனத்துடன் உள்ளோம் என்றும் குறிப்பிட்டனர்.
முன்னதாக, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், சிபிஐ காவலுக்கு எதிரான ப.சிதம்பத்தின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிப்பது மிக மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்து, தில்லி உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீதும் செப்.5-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட ஒரு நாள் சிபிஐ காவல் முடிந்த நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆஜர்படுத்தப்பட்டார். 
அப்போது, உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக, நீதிபதி அஜய் குமார் குஹரிடம் சிபிஐ மற்றும் ப.சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர்கள் எடுத்துரைத்தனர். அதனை கவனத்தில் கொண்ட நீதிபதி, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. அவரை மீண்டும் செப்.5-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கு விவரம்: கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. 
இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 
இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT