இந்தியா

எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஒழிப்புக்கான சர்வதேச நிதி: ரூ.160 கோடி வழங்க இந்தியா முடிவு

4th Sep 2019 01:31 AM

ADVERTISEMENT


எய்ட்ஸ், காசநோய் (டி.பி.), மலேரியா ஆகிய நோய்களை ஒழிப்பதற்கான சர்வதேச நிதிக்கு ரூ.160 கோடி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. 2020-22-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பங்களிப்பாக இந்த நிதி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பின் (டபிள்யு.ஹெச்.ஓ) பிராந்தியக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்போது இரண்டாவது முறையாக இந்தியா இக்கூட்டத்தை நடத்தியுள்ளது. மொத்தமுள்ள 11 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 8 நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களும், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய நாடுகள் பிரிவு உயரதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நோய் பரவும் காலத்தில் நெருக்கடி நிலையை சமாளிப்பது மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கையெழுத்திட்டனர். அப்போது, உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிதிக்கு இந்தியா சார்பில் 2 லட்சம் டாலர் (ரூ.1.5 கோடி) வழங்கப்படும் என்று ஹர்ஷ் வர்த்தன் அறிவித்தார்.
மேலும், எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகிய நோய்களை ஒழிப்பதற்கான சர்வதேச நிதிக்கு இந்தியா சார்பில் 2020-22-ஆம் ஆண்டுக்கான பங்களிப்பாக ரூ.160 கோடி அளிக்கப்படும். இது இதற்கு முன்பு அளிக்கப்பட்ட பங்களிப்பைவிட 10 சதவீதம் அதிகமாகும். 2002-ஆம் ஆண்டு இந்த நிதிக்கு இந்தியா பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. மேலும், இந்த நோய்களை ஒழிப்பதற்காக நிதியையும் பெற்று வருகிறது.
எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகியவை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இது தொடர்பாக சர்வதேச நிதித் தொகுப்புக்கு இந்தியா தொடர்ந்து தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் பல நோயாளிகள் காப்பாற்றப்படுவர், பலர் நோய் வருவதற்கு முன்பே பாதுகாக்கப்படுவார்கள்.
மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நீர் காரணமாக நோய்கள் பரவுவது முன்பு அதிகம் இருந்தது. ஆனால், இந்தியாவில் இப்போது இந்த வகை நோய்ப் பரவல் வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த மே மாதம் ஒடிஸாவை ஃபானி புயல் தாக்கியது. அப்போது பேரிடர் மேலாண்மைக் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததன் காரணமாக, நோய் பரவுவதும், அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளும் முற்றிலும் தடுக்கப்பட்டது என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT