இந்தியா

எம்எல்ஏக்கள் மூலம் ம.பி. அரசை மிரட்ட திக்விஜய் சிங் முயற்சி : மாநில அமைச்சர் குற்றச்சாட்டு

4th Sep 2019 01:22 AM

ADVERTISEMENT


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங் சில குறிப்பிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மூலம் மத்தியப் பிரதேச அரசை பகிரங்கமாக மிரட்டி வருவதாக அம்மாநில வனத்துறை அமைச்சர் உமங் சிங்கார் குற்றம்சாட்டினார்.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசை சீர்குலைக்க திக்விஜய் சிங் முயற்சித்து வருவதாக உமங் சிங்கார், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அங்கு காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து 9 மாதங்களே ஆகியுள்ள நிலையில் அமைச்சர் ஒருவரே இவ்வாறு கருத்து கூறியிருப்பது அக்கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசலைக் காட்டுகிறது.
இது தொடர்பாக அமைச்சர் உமங் சிங்கார், போபாலில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
திக்விஜய் சிங் சில குறிப்பிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மூலம் மாநில அரசை பகிரங்கமாக மிரட்டி வருகிறார். அவருக்கு அனைத்தும் தேவைப்படுகிறது. அவர் பத்து ஆண்டுகளாக மாநில அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அதன் பலன்களை அனுபவிக்க திக்விஜய் சிங் களமிறங்கியுள்ளார்.
கோவாவில் கடந்த 2017இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தபோதிலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு திக்விஜய் சிங்தான் காரணம். அவரது செயல்களால்தான், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திரப் பிரதேச முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸை விட்டு விலகினார்.
திக்விஜய் சிங் அண்மையில் பேசும்போது ஹிந்துக்களை பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் பாகிஸ்தானின் உளவாளிகள் என்றும் கிண்டலாகக் கூறியிருந்தார். எல்லாவற்றையும் கேலி பேசும் அவரால் கட்சியின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவர் மாநில அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுக்கிறார்.
அரசு ஊழியர் பணியிட மாற்றம் தொடர்பான தனது பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு திக்விஜய் சிங் அண்மையில் அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியது மிகவும் தவறு. கமல்நாத் தலைமையிலான மாநில அரசை திரைமறைவில் இருந்து இயக்க திக்விஜய் முயற்சிக்கிறார் என்று அமைச்சர் உமங் சிங்கார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து திக்விஜய் சிங்கின் மகனும், மாநில இணையமைச்சருமான ஜெய்வர்தன் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், அமைச்சர்களுக்கு கடிதம் எழுதுவது ஜனநாயகத்தில் இயல்பானதுதான். அதில் தவறு ஏதும் இல்லை.
மத்தியப் பிரதேசத்தில் நமது கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் மக்களின் ஆசி காரணமாகவே காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. தற்போது நாட்டின் அரசியல்சாசனத்தைக் காப்பாற்றுவதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து திக்விஜய் சிங்கிற்கு நெருக்கமானவராக கருதப்படும் மாநில அமைச்சர் மானக் அக்ரவால் கருத்து தெரிவிக்கையில் இந்த விவகாரத்தை முதல்வர் கமல்நாத் கவனத்தில் கொண்டுள்ளார். அவர் இப்பிரச்னையை இன்றே தீர்ப்பார் என்று குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT