இந்தியா

உலக தேர்தல் ஆணையங்கள் கூட்டமைப்பு தலைவராக சுனில் அரோரா பொறுப்பேற்பு

4th Sep 2019 01:23 AM

ADVERTISEMENT


உலக தேர்தல் ஆணையங்கள் கூட்டமைப்பின் தலைவராக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
உலகில் உள்ள 109 நாடுகளைச் சேர்ந்த 115 தேர்தல் ஆணையங்கள் இணைந்து இந்தக் கூட்டமைப்பு கடந்த 2013-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தென் கொரியாவில் இதன் தலைமையிடம் அமைந்துள்ளது. 
தேர்தல் ஆணையங்களின் பணிகள் குறித்தும், அதை வலுப்படுத்துவது குறித்துமான தகவல்களை அனைத்து நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்தக் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இந்த கூட்டமைப்பின் 4-ஆவது பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 50 நாடுகளைச் சேர்ந்த 120 பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், ருமேனியா நாட்டைச் சேர்ந்தவருமான லான் மின்கு ரடுலெஸ்கு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்தக் கூட்டத்தில், உலக தேர்தல் ஆணையங்கள் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுனில் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக பதவியேற்ற பின் அவர் பேசியதாவது:
உலக தேர்தல் ஆணையங்கள் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக, கடந்த 2011-12 ஆண்டுகளில் இந்திய தேர்தல் ஆணையம் பணியாற்றியது. கடந்த 2013 -ஆம் ஆண்டு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின் செயற்குழுவில்  இந்திய தேர்தல் ஆணையம் இடம் பெற்றது. அதன் பின்னர், கடந்த 2017-ஆம் ஆண்டு துணைத் தலைவர் பதவியும் இந்தியாவுக்கு கிடைத்தது.
இந்தக் கூட்டமைப்பில் 115 தேர்தல் ஆணையங்கள் உறுப்பினர்களாக உள்ளன. 20 தேர்தல் ஆணையங்கள் இணை உறுப்பினர்களாக உள்ளன. உலகம் முழுவதும் உள்ள தேர்தல் ஆணையங்களை வலுப்படுத்தும் சர்வதேச அமைப்பாக இந்தக் கூட்டமைப்பு உள்ளது என்றார் சுனில் அரோரா.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT