இந்தியா

உ.பி. அரசுப் பள்ளி மதிய உணவு விவகாரம்: பத்திரிகையாளர் மீதான வழக்கு குறித்து மாநில அரசு ஆய்வு

4th Sep 2019 01:28 AM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக ரொட்டியும், உப்பும் மட்டுமே வழங்கப்பட்டதாக விடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்து வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்தது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் இதுதொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அரசுப் பள்ளியில் ரொட்டியுடன் உப்பு மட்டும் சேர்த்து வழங்கப்பட்டது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் சிலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார். உத்தரப் பிரதேசத்தின் மிர்ஸாபூர் பகுதிக்குள்பட்ட ஜமால்பூர் கிராம அரசுப் பள்ளியில் மதிய உணவு வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
ரொட்டி தயாராகிய பின்னும், அதற்கான காய்கறிக் கூட்டு தயார் செய்யப்படவில்லை. அதனால் அந்தப் பள்ளி மாணவர்கள் ரொட்டியுடன் உப்பைச் சேர்த்து சாப்பிடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் அண்மையில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
 அதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், அந்தக் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் பால் மற்றும் விடியோ எடுத்த பத்திரிகையாளர் பவன் குமார் ஜெய்ஷ்வால் ஆகியோர் மாநில அரசு மீது அவதூறு பரப்பும் நோக்கில் சதி செய்து இத்தகைய விடியோவை வெளியிட்டதாக மிர்ஸாபூர் கல்வி அதிகாரி பிரேம் சங்கர் ராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவர் உள்பட சிலர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மிர்ஸாபூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பத்திரிகையாளர் மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,  பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஒருவர், அரசுப் பள்ளியில் மதிய உணவாக ரொட்டியுடன் உப்பு மட்டும் வழங்கப்படுவதை பார்த்ததும், புகைப்படம் எடுத்து செய்தியாக வெளியிடுவாரே தவிர, நண்பருக்கு தொடர்பு கொண்டு, விடியோ அனுப்புகிறேன். அதை அனைவருக்கும் பரப்ப வேண்டும் என்று கூறியிருக்க மாட்டார். ஆனால், இந்த விவகாரத்தில் அப்படி நடந்துள்ளது. இதனால், பவன் குமாருக்கு சதித்திட்டத்தில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT