இந்தியா

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராகிறார் பிரியங்கா?

4th Sep 2019 04:37 AM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக பிரியங்கா விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர அந்த மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் குழுவும் மாற்றி அமைக்கப்படும் என்றும், இதில் 40 வயதுக்குள்பட்டவர்களே அதிகம் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக பிரியங்காவை அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமித்தார். அதன் பிறகு மக்களவைத் தேர்தலுக்காக உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். எனினும், ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தியைத் தவிர வேறு எந்த காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை.

அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ராகுல் காந்தியும் தோல்வியைத் தழுவினார். இது, அந்த மாநிலத்தில் காங்கிரஸின் செல்வாக்கு எந்த அளவுக்கு சரிந்துவிட்டது என்பதை உணர்த்தியது. இந்தச் சூழ்நிலையில், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக பிரியங்கா நியமிக்கப்பட இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்த நியமனம் தொடர்பாக கடந்த 3 மாதங்களாக பரிசீலனை நடைபெற்று வந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் கூட உத்தரப் பிரதேசத்துக்கு பிரியங்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தார். அந்த மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஆலோசனை நடத்தினார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து, இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
இந்தச் சூழலில், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்படவுள்ளார். இதன் மூலம் அடுத்ததாக அவர் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கும் முன்னிறுத்தப்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT