இந்தியா

இஸ்ரேல் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து

4th Sep 2019 01:32 AM

ADVERTISEMENT

 வரும் 9-ஆம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
ஒரு நாள் அரசு முறைப் பயணமாக வரும் 9-ஆம் தேதி இந்தியா வரவிருந்த நெதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருந்தார். 
இந்நிலையில், இஸ்ரேலில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், தனது பயணத்தை நெதன்யாகு ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் அவர் தெரிவித்தார். 
அதன் பின்னர், தங்களது பேச்சுவார்த்தையை ஒத்திவைப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு அப்போதும் தனது பயணத்தை நெதன்யாகு ரத்து செய்தார்.
இஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 120 இடங்களில் ஆளும் நெதன்யாகுவின் கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை கூட்டணி மூலமாக நெதன்யாகுவால் பெற இயலவில்லை. இதனால், கடந்த மே மாதம் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதையடுத்து வரும் 17-ஆம் தேதி அங்கு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இஸ்ரேலின் நீண்ட கால பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற நெதன்யாகு, உலக நாடுகளின் தலைவர்களது ஆதரவு தனக்கு உள்ளதைக் காண்பித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 
இஸ்ரேலில் பிரதமர் மோடி, ரஷிய பிரதமர் விளாதிமர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது புகைப்படத்துடன் நெதன்யாகு புகைப்படம் சேர்த்து பதாகை விளம்பரங்கள் கடந்த ஜூலை மாதம் வைக்கப்பட்டன. 
இதற்கு முன்னர், கடந்த 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். 
இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். அதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு பெஞ்சமின் நெதன்யாகு வருகை தந்திருந்தார். இரு தலைவர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளதாக இஸ்ரேல் நாளிதழ்களில் அடிக்கடி செய்திகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT