தமிழ் மொழி அழகானது என்றும், தமிழ் மக்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அந்தக் கவிதையின் தமிழாக்கத்தை அவர் இன்று தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டார். பிரதமர் மோடியின் இந்த கவிதையைப் பாராட்டி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் நடிகர் விவேக் ஆகியோர் டிவீட் செய்திருந்தனர்.
மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி எழுதிய கவிதையின் தமிழாக்கம்
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி தற்போது அடுத்தடுத்து டிவீட் செய்திருக்கிறார். தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுக்கான பதிலில், தமிழ் மொழி அழகானது என்றும், தமிழ் மக்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் சிறந்த கலாசாரத்தைக் கொண்ட இந்தியாவின் பழமையான மொழியில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்குக்கான பதிலில், "இயற்கை மீதான மரியாதை என்பது நமது பண்பாட்டின் முக்கியப் பகுதியாகும். இயற்கை தெய்வீகத்தன்மையையும், மகத்துவத்தையும் போதிக்கிறது. மாமல்லபுரத்தின் அழகான கரையோரங்களும், காலை நேரத்து அமைதியும் எனது எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு உகந்த தருணமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.