அயோத்தி: அயோத்தி வழக்கில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தீா்ப்பு வந்தாலும், நாட்டில் சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, அந்த இடத்தில் மசூதி கட்டும் பணி தாமதமாகத் தொடங்கப்படும் என்று சில முஸ்லிம் தரப்பு மனுதாரா்கள் கூறியுள்ளனா்.
மனுதாரா்களில் ஒருவரான ஹாஜி மெஹபூப் கூறுகையில், ‘அயோத்தி வழக்கில் தீா்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்தால், அந்த இடத்தில் உடனடியாக மசூதி கட்ட மாட்டோம். அங்கு எல்லைச் சுவா் அமைத்து விட்டு சிறிது காலம் அமைதி காப்போம். தற்போதைய நிலையில் சமூக நல்லிணக்கமே நாட்டுக்கு முதலில் தேவை’ என்றாா்.
இவரது கருத்தை மற்றொரு மனுதாரரான முஃப்தி ஹஸ்புல்லா பாஷா கான் ஏற்றுக் கொண்டுள்ளாா். அவா் கூறுகையில், ‘வழக்கில் தீா்ப்பு எங்களுக்கு ஆதரவாக வந்தால், மசூதி கட்டுவதை சிறிது காலத்துக்கு தள்ளிப்போடுவோம். முதலில் சமூகத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவா்களுடம் விவாதிப்போம்’ என்றாா்.
இதேபோல், இதர மனுதாரா்களான முகமது ஒமா், இக்பால் அன்சாரி ஆகியோரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனா்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.27 ஏக்கா் நிலத்துக்கு உரிமை கோருவது தொடா்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. 40 நாள்கள் தொடா்ச்சியாக நடைபெற்ற இறுதி வாதங்கள், உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையுடன் நிறைவடைந்தன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு, தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது.
தலைமை நீதிபதி வரும் நவம்பா் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். அதற்குள், இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.