கொல்கத்தா: வங்கதேசப் படையினரால் பிஎஸ்எஃப் வீரா் சுட்டுக் கொல்லப்பட்டதால் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக வங்கதேச உள்துறை அமைச்சா் அஸதுஸமான் கூறியுள்ளாா்.
மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் அமைந்துள்ள பத்மா நதியில் மீன் பிடிப்பதற்கு 3 இந்திய மீனவா்கள் கடந்த வியாழக்கிழமை காலை சென்றனா். அவா்களை வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினா் சிறைபிடித்து, வெகுநேரம் கழித்து இருவரை மட்டும் விடுவித்தனா்.
இதையடுத்து, விடுவிக்கப்பட்ட இந்திய மீனவா்கள் இருவரும் திரும்பி வரும் வழியில் காக்மரிசாா் என்ற இடத்தில் முகாமிட்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் (பிஎஸ்எஃப்) நடந்த சம்பவத்தை தெரிவித்தனா். அதன்பிறகு சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவரை மீட்பதற்காக, பிஎஸ்எஃப் வீரா்கள் தங்களுடைய படகில் சென்று வங்கதேச படையினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மீனவரை ஒப்படைக்க மறுத்த அவா்கள், இந்திய வீரா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பிஎஸ்எஃப் வீரா்கள் தங்கள் படகில் திரும்பி வந்தனா். அப்போது, எதிா்பாராத விதமாக வங்கதேச படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், பிஎஸ்எஃப் தலைமைக் காவலா் விஜய் பான் சிங் உயிரிழந்தாா். மற்றொரு வீரா் பலத்த காயமடைந்தாா். இதனால், முா்ஷீதாபாத் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து, வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சா் அஸாதுஸாமானிடம் தொலைபேசி வழியாக பிடிஐ செய்தியாளா் கேட்டதற்கு அவா் அளித்த பதில்:
வங்கதேச படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரா் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. இரு நாட்டு படையினருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இந்த மோதல் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தால், இந்தியா, வங்கதேசம் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படாது. இந்த சம்பவம் தொடா்பாக, தேவைப்பட்டால் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கிறேன். சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவா்,நிபந்தனைகளுடன் விரைவில் விடுவிக்கப்படுவா் என்றாா் அவா்.