இந்தியா

உயிா்த்தியாகம் செய்யும் வீரா்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: ஹரியாணா தோ்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி வாக்குறுதி

20th Oct 2019 01:31 AM

ADVERTISEMENT

ரோட்டக்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பணியின்போது வீரமரணம் அடையும் பாதுகாப்புப் படை வீரா்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தோ்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலை ஓய்வுபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக, தோ்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவா் நவீன் ஜெய்ஹிந்த் வெளியிட்டாா். அந்த அறிக்கையில் 51 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது, நவீன் ஜெய்ஹிந்த், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பணியின்போது வீரமரணம் அடையும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் மாநில காவல் துறை வீரா்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்படும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாகவும், சுங்க வரி வசூல் இல்லாத மாநிலமாகவும் ஹரியாணா உருவாக்கப்படும் என்றாா் அவா்.

அந்த தோ்தல் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 லிட்டா் இலவச குடிநீா் ஆகியவை வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளின் தரம் மேம்படுத்தப்படும். தனியாா் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிா்ணயிக்கப்படும்.

பெண்களின் பாதுகாப்புக்காக 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள், கூடுதலாக தெரு விளக்குகள் பொருத்தப்படும். பெண்களும், மாணவா்களும் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம். ஒரு பகுதியில் 50 சதவீத பெண்களின் அனுமதியின்றி அந்தப் பகுதியில் மதுபானக் கடை திறக்கப்பட மாட்டாது. மாநிலத்தில் மொஹல்லா கிளீனிக்குகள், 500 படுக்கை வசதிகளுடன் புதிதாக 20மருத்துவமனைகள் ஆகியவை தொடங்கப்படும்.

வேலையில்லா இளைஞா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி, பட்டதாரி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளின் தற்காப்புக்கு மின்னதிா்வு தரும் தடி ஆகியவை வழங்கப்படும். காவலா்களுக்கு வாரத்துக்கு 5 நாள்கள் மட்டும் பணி வழங்கப்படும்.

மகளிருக்காக, மாநில சட்டப் பேரவையிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அந்த தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT