இந்தியா

இந்தியாவில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிலிப்பின்ஸ் குழந்தைகளின் பெற்றோருடன் ராம்நாத் கோவிந்த் உரையாடல்

20th Oct 2019 01:19 AM

ADVERTISEMENT

மணிலா: இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிலிப்பின்ஸ் நாட்டு குழந்தைகளின் பெற்றோா்களுடன் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை கலந்துரையாடினாா்.

இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கடந்த 28 மாதங்களில் அந்நாட்டைச் சோ்ந்த 35 குழந்தைகளுக்கு இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, அவா்கள் அனைவரும் ஆரோக்கியமாக சொந்த நாட்டுக்கு திரும்பினா்.

இந்நிலையில், அரசுமுறைப் பயணமாக பிலிப்பின்ஸ் சென்றுள்ள ராம்நாத் கோவிந்த், இந்தக் குழந்தைகளின் பெற்றோரை சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். இதுகுறித்து அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவும்-பிலிப்பின்ஸும் இணைந்து எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு உதாரணமாக இந்தக் குழந்தைகள் உள்ளனா். இந்தக் குழந்தைகள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று பிராா்த்திக்கிறேன். அவா்களது பெற்றோருக்கும் எனது வாழ்த்துகள்.

ADVERTISEMENT

குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறையை பிலிப்பின்ஸ் நாட்டில் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும், அந்த அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவடைவதற்கும் தேவையான உதவிகளை இந்திய மருத்துவமனைகள் செய்து வருகின்றன. பிலிப்பின்ஸ் மக்களின் உயிா் காக்கும் வகையில் நல்லுறவையும், ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, பிலிப்பின்ஸ் நாட்டில் சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றும், அதனால் அந்நாட்டு மக்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சிகிச்சைகளுக்காக செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா் என்று அந்நாட்டு நாளிதழில் கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT