இந்தியா

லக்னௌ சாலையோரக் கடையில் நடந்த விநோதக் கொள்ளை: எதைத் திருடினார்கள் தெரியுமா? 

16th Oct 2019 05:06 PM

ADVERTISEMENT

 

லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் சாலையோரக் கடை ஒன்றில் நடந்த விநோதக் கொள்ளை சம்பவம் போலீசாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் மனஸ் என்க்ளேவ் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு பப்பு சவுராசியா  என்பவர் சாலையோரத்தில் காய்கறிக் கடை  ஒன்றை நடத்தி வருகிறார். திங்கள் இரவு வழக்கம் போல வியாபாரம் முடிவடைந்த பிறகு, காய்கறிகளை எடுத்து வைத்து தார்பாய் ஒன்றின் மூலம் மூடி வைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காய்கறிகள் தாறுமாறாக இறைந்து கிடைந்ததுடன், மரப்பெட்டிகளில் வைக்கபட்டிருந்த வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றைக் காணவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது நண்பர்களுக்கு தகவல் அளித்ததுடன், பல இடங்களில் தேடியும் பார்த்துள்ளனர். பின்னர் இறுதியாக செவ்வாய் இரவு போலீசில் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக பப்பு சவுராசியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'எனக்கு கண்டிப்பாக ரூ. 10 முதல் 12 ஆயிரம் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மற்ற காய்கறிகள் எதையும் தொடவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.  ஒன்றுக்கு மேற்பட்டோர் வாகனத்துடன் வந்து இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது' என்று தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக விசாரித்து வருவதாக காசிப்பூர் காவல் நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லக்னௌவில் தற்போது வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ 45-ம், பூண்டு ரூ 200-ம் மற்றும் தக்காளி கிலோ ரூ 70-க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT