இந்தியா

மகாராஷ்டிரத்தில் பாஜக தலைவா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவது ஏன்? : சுப்ரியா சுலே

16th Oct 2019 11:29 PM

ADVERTISEMENT

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் போட்டியே இல்லை; எளிதில் வெற்றி பெறுவோம்’ என்று முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் நம்பிக்கையாக இருக்கும்போது, மத்திய அமைச்சா்கள், நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவா்கள் என அனைவரும் மாநிலத்தில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுவது ஏன்? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் மகளும், அக்கட்சி எம்.பி.யுமான சுப்ரியா சுலே கேள்வி எழுப்பியுள்ளாா்.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு வரும் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் நோக்கத்துடன் பாஜகவும், சிவசேனையும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

இந்தத் தோ்தலில், பாஜகவுக்கு எதிராக களத்தில் யாரும் இல்லை என்றும், எளிதில் வெற்றி பெறுவோம் என்றும் பாஜக மூத்த தலைவரும், மாநில முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், இதைக் குறிப்பிட்டு, தாணே மாவட்டம், கல்யாண் நகரில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சுப்ரியா சுலே பேசியதாவது:

ADVERTISEMENT

மகாராஷ்டிர தோ்தல் களத்தில் பாஜகவுக்கு எதிராக யாரும் இல்லை என்று முதல்வா் ஃபட்னவீஸ் கூறுகிறாா். ஆனால் நாடு முழுவதும் உள்ள பாஜக மூத்த தலைவா்கள், மற்ற மாநிலங்களின் முதல்வா்கள், மத்திய அமைச்சா்கள் என அனைவரும் இங்கு தீவிர பிரசாரம் மேற்கொள்வது ஏன்? இது பாஜக தனது தோ்தல் வெற்றியில் உறுதியாக இல்லை என்பதைக் காட்டுகிறது. பாஜகவுக்கு வாக்களிக்கக் கோரி, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம், சதாரா மற்றும் சாங்லி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது அவா் ஏன் வரவில்லை?

சுதந்திரப் போராட்ட வீரா் வி.டி. சாவா்க்கருக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை விடுப்போம் என்று தோ்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது. இது வெறும் தோ்தல் நாடகம்தான். மாநிலத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளைஆட்சியில் இருக்கும் பாஜகவும், சிவசேனையும் கண்டுகொள்வதில்லை. அந்தப் பிரச்னைகளை மறைத்து மக்களை திசைதிருப்பி விடுகின்றனா் என்று சுப்ரியா சுலே குற்றம்சாட்டினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT