இந்தியா

வரி செலுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

6th Oct 2019 04:31 AM

ADVERTISEMENT

 

வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தார்வாடில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய வரி ஆலோசகர்கள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற வரி ஆலோசகர்கள் மாநாட்டை குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்து அவர் பேசியது:

நமது நாடு முன்னேற்றம் காண வேண்டுமானால், வரி வசூல் சிறப்பாக நடைபெற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவுகிறது மக்கள் அளிக்கும் வரி என்ற விழிப்புணர்வு மக்களிடையே உருவாக வேண்டும்.

ADVERTISEMENT

வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். வரி செலுத்துவதை மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது. வரி முறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கிறோம் என்ற உணர்வு மேலிட வேண்டும். வரி முறையை கணினி மயமாக்கியுள்ளதால், ஒளிவுமறைவின்மை அமலுக்கு வந்துள்ளது.

சரக்கு - சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளும் பதிவாகி விடுகின்றன. அதிக அளவில் வரி வசூலானால், அது வரிக் குறைப்புக்கு வழிவகுக்கும். கணினி மயமாக்கத்தால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதோடு, முறைகேடுகளுக்கு முடிவு கட்டியுள்ளது.

வரி ஆலோசனையில் ஈடுபட்டிருப்போர் ஏதாவது பிரச்னைகளை எதிர்கொண்டால், அதுகுறித்து வரித் துறை அதிகாரிகளிடம் பேசலாம். உண்மையான பிரச்னைகளை அலசி ஆராய்ந்து தீர்வுகாண நாங்கள் தயாராக இருக்கிறோம். வரி வசூலில் வரி ஆலோசகர்களின் பங்களிப்பைப் புறந்தள்ளிவிட முடியாது என்றார் அவர்.

பெருநிறுவன வரிக் குறைப்பு ஒருங்கிணைந்த வரி சீர்திருத்தம்: ஹுப்பள்ளியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் மேலும் பேசியது:

பெருநிறுவன வரி கட்டமைப்பைச் சீரமைத்துள்ளது, வரிக் குறைப்பில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாது, எளிமையான வரிமுறையைக் கையாள்வது மற்றும் ஒருங்கிணைந்த வரி சீர்திருத்தத்தை அமல்படுத்துவதே ஆகும். இதன் மூலம் வரி வசூலில் ஒளிவுமறைவின்மையை அமல்படுத்த விரும்புகிறோம்.

நமது நாடு மாற்றங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சமூக கட்டமைப்பை மாற்றியமைக்கும் சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். சிவப்புநாடா சமூகத்தில் இருந்து சிவப்பு கம்பள சமூகமாக மாறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

சரக்கு - சேவை வரியை அமல்படுத்தியதால், அனைத்து வகையான வணிக பரிவர்த்தனைகளையும் வரி வரம்புக்குள் கொண்டுவந்துள்ளோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் வளர்ச்சி அடைய காரணமாக இருந்தது. உலகளவில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே தொழிலகங்கள் நிலைத்திருக்க முடியும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சிகளில், மத்திய ரசாயனத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கர்நாடக தொழில் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT