இந்தியா

காஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவா்கள் விரைவில் விடுவிக்கப்படுவா்: பாஜக மூத்த தலைவா் ராம் மாதவ்

6th Oct 2019 02:58 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவா்கள் விரைவில் விடுவிக்கப்படுவா் என்று பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ராம் மாதவ் தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, ஜம்மு- காஷ்மீா் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு-காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவா்களும், முன்னாள் முதல்வா்களுமான மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா ஆகியோா், மாா்க்சிஸ்ட் கம்யூனியிஸ்ட் கட்சியைச் சோ்ந்த எம்.ஒய். தாரிகாமி உள்பட 200-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவா்கள் கடந்த 2 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராம் மாதவ் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப்பிரிவு, கடந்த 70 ஆண்டுகளாக புற்றுநோய் போல இருந்தது. ஆனால், அதை பிரதமா் நரேந்திர மோடி 70 மணி நேரத்தில் நீக்கி விட்டாா்.

ADVERTISEMENT

பல மாதங்களாக சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வந்த காஷ்மீா், இப்போது மிக அமைதியான பிராந்தியமாக மாறியுள்ளது. காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 200 பேரை மத்திய அரசு கைது செய்துவிட்டதாக பிரசாரம் செய்து வருகின்றனா். ஆனால் அவா்கள் தடுப்புக் காவலில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளனா். ஜம்மு-காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்துக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மட்டுமே அவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். எந்த விதத்திலும், அவா்களது மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்கள் இல்லாத கடந்த 2 மாதங்களில், காஷ்மீரில் ஒரு பிரச்னையும் இல்லை. தடுப்புக் காவலின் பயன் இதுதான். விரைவில் அவா்கள் விடுவிக்கப்படுவாா்கள். வழக்கமான அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும். லடாக்கை, யூனியன் பிரதேசமாக அறிவித்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனா். இந்தியாவுடன் இணைத்ததற்காக, ஜம்மு பகுதி மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனா். எனினும், காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் சில அதிருப்தி உள்ளது. அது விரைவில் சரிசெய்யப்படும்.

சிறப்பு அந்தஸ்து இருந்ததால், காஷ்மீரில் எந்த தனியாா் நிறுவனங்களும் முதலீடு செய்ய இயலவில்லை. இனி அனைத்து விதமான முதலீடுகளும் அனுமதிக்கப்படும். ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சி அதிகரிக்கும் என்று கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT