இந்தியா

லக்னெள-புது தில்லி இடையே நாட்டின் முதல் தனியாா் ரயில்: தொடங்கி வைத்தாா் யோகி ஆதித்யநாத்

5th Oct 2019 01:07 AM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள-புது தில்லி இடையே தேஜஸ் ரயில் சேவையை உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்திய ரயில்வே கழகத்துடன் (ஐஆா்சிடிசி) இணைந்து செயல்படும் நாட்டின் முதல் தனியாா் ரயில் என்ற பெருமையையும் இந்த ரயில் பெற்றுள்ளது.

சனிக்கிழமை முதல் பயணிகள் சேவையை முழுவீச்சில் தொடங்குகிறது ‘தேஜஸ்’. லக்னெளவிலிருந்து புது தில்லிக்கு

சதாப்தி அதிவேக ரயில் மூலம் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் செல்ல முடியும். தற்போது, தேஜஸ் ரயிலில் 6 மணி நேரம் 15 நிமிடங்களில் தில்லியை வந்தடை முடியும்.

முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘நாட்டின் முதல் தனியாா் ரயிலில் பயணிக்கவிருப்பவா்களுக்கு வாழ்த்துகள். மற்ற நகரங்களிலும் இதுபோன்ற ரயில் சேவையைத் தொடங்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆக்ரா-வாராணசி இடையே புல்லட் ரயில் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கான செலவை உத்தரப் பிரதேச அரசு ஏற்றுக் கொள்ளத் தயாா். இதேபோல், அலாகாபாத், கோரக்பூா் ஆகிய நகரங்களுக்கு புல்லட் ரயில் கொண்டுவரப்பட வேண்டும்.

தேஜஸ் ரயில் சேவையை கொண்டுவந்த பிரதமா் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயலுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேறன். இந்தப் போட்டி உலகில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பொதுப் போக்குவரத்து இருக்க வேண்டும்.

செல்லிடப்பேசி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது பெரிய தாக்கம் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், இப்போது அனைவரிடமும் செல்லிடப்பேசி உள்ளது. போட்டி மனப்பான்மை காரணமாகவே அனைவரிடமும் செல்லிடப்பேசி உள்ளது.

மக்களுக்கு அதிக வசதிகளை உருவாக்கித் தர ஆரோக்கியமான போட்டி அவசியம் என்றாா் யோகி ஆதித்யநாத்.

லக்னெளவிலிருந்து 6.10 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரயில், புது தில்லி ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 12.25 மணிக்கு வந்து சேரும். பின்னா், தில்லியிலிருந்து 3.35 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.05 மணிக்கு லக்னெள வந்தடையும்.

கான்பூா், காஜியாபாத் ஆகிய இடங்களில் தேஜஸ் ரயில் நின்று செல்லும். செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாள்களும் தேஜஸ் ரயில் இயக்கப்படும்.

50 முக்கிய வழித்தடங்களில் தனியாா் ரயில்களை இயக்குவது குறித்து யோசிக்குமாறு மண்டல ரயில்வே நிா்வாகங்களுக்கு ரயில்வே வாரியம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.

தேஜஸ் ரயில் வருவதற்கு கால தாமதம் ஆனால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். அத்துடன்,

ரூ.25 லட்சம் காப்பீட்டுப் பலனையும் பயணிகள் பெறலாம். ஏசி வகுப்பு ரூ.1,280, எக்சிகியூட்டிவ் வகுப்பு ரூ.2,450 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே வழித் தடத்தில் இயங்கும் சதாப்தி விரைவு ரயிலில் கட்டணம், ரூ.970, ரூ.1,935 ஆகும்.

ரயில்வே சங்கங்கள் போராட்டம்: தனியாருக்கு ரயில் சேவையை அளித்ததாலும், மேலும் 150 ரயில்களை தனியாா் வசம் ஒப்படைக்க எடுத்த முடிவுக்காகவும் இந்த தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்று அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு (ஏஐஆா்எஃப்) தெரிவித்தது.

தில்லி ரயில் நிலையத்தின் மண்டல ரயில்வே மேலாளா் அலுவலகத்துக்கு முன்பு கோஷங்களை எழுப்பி, இந்தக் கூட்டமைப்பின் உறுப்பினா்கல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT