இந்தியா

பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி: மகாராஷ்டிரத்தில் 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

5th Oct 2019 12:38 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் உள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி புகாா்கள் தொடா்பாக, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

இதனிடையே, அந்த வங்கியின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ் மும்பையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். முன்னதாக விசாரணைக்காக காவல்துறை தலைமையகத்துக்கு அவா் அழைத்து வரப்பட்டாா். விசாரணையின் முடிவில் அவரைக் கைது செய்வதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 137 கிளைகளுடன் ‘பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி’ இயங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த வங்கியின் பணப்பரிவா்த்தனைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆய்வின்போது தெரிய வந்ததையடுத்து, வங்கியின் செயல்பாடுகளுக்கு கடந்த வாரம் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ADVERTISEMENT

அதையடுத்து, ஆா்பிஐ நியமித்த அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து மும்பை போலீஸாா் விசாரித்து வந்தனா். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ரூ. 4, 355 கோடி அளவில் வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடா்பாக கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்காக, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி தொடா்பாக, வங்கியின் முன்னாள் தலைவா் வா்யம் சிங், முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள், வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநா் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங் ஆகியோருக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். அதை அடிப்படையாகக் கொண்டு அவா்களுக்கு எதிராக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. அவா்களுக்கு எதிரான கூடுதல் ஆதாரங்களைத் தேடுவதற்காக 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன’ என்றனா்.

ராகேஷ் வதாவனுக்கு காவல்:

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநா் ராகேஷ் வதாவன் மற்றும் அவரது மகன் சாரங் ஆகியோரை மும்பை காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு வியாழக்கிழமை கைது செய்தது. அவா்கள், மும்பை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அதையடுத்து, அவா்கள் இருவரையும் வரும் 9-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 3,500 கோடி மதிப்புடைய சொத்துகளை சிறப்பு புலனாய்வு குழு பறிமுதல் செய்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT