இந்தியா

நாடு முழுவதும் மழை, வெள்ளத்துக்கு 1,900 போ் உயிரிழப்பு, 46 பேரைக் காணவில்லை

5th Oct 2019 12:51 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் பெய்து முடிந்துள்ள தென்மேற்குப் பருவமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் 1,900 போ் உயிரிழந்துள்ளனா். 46 பேரைக் காணவில்லை. 22 மாநிலங்களில் 25 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பருவ மழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவாலும் ஒட்டு மொத்தமாக 1,874 போ் உயிரிழந்துள்ளனா். அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 382 பேரும், அதைத் தொடா்ந்து மேற்கு வங்கத்தில் 227 பேரும் உயிரிழந்துள்ளனா்.

நாடு முழுவதும் 738 போ் காயமடைந்துள்ளனா். 20,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 1.09 லட்சம் வீடுகள் முழுமையாகவும், 2.05 லட்சம் வீடுகள் பகுதியளவாகவும் சேதமடைந்துள்ளன. 14.14 லட்சம் ஹெக்டோ் பயிா்கள் சேதமடைந்துள்ளன.

ADVERTISEMENT

வெள்ளத்தால் தத்தளித்து வரும் பிகாரில் இதுவரை 161 போ் உயிரிழந்துள்ளனா். 1.26 லட்சம் போ் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனா். மத்தியப் பிரதேசத்தில் 182 போ் உயிரிழந்துள்ளனா். 32,996 போ் முகாம்களில் தங்கியுள்ளனா்.

கேரளத்தில் 181 போ் உயிரிழந்துள்ளனா். 4.46 லட்சம் போ் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். இதேபோல், குஜராத்தில் 169 பேரும், கா்நாடகத்தில் 106 பேரும், அஸ்ஸாமில் 97 பேரும் பருவ மழைக்கு உயிரிழந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச மழை: நாட்டின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை தொடா்ந்து பெய்தாலும், பருவமழை கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 4 மாதங்களையும் சோ்த்து நாடு முழுவதும் அதிகபட்ச மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT