இந்தியா

நாடு சா்வாதிகாரத்தை நோக்கிப் போகிறது: ராகுல் குற்றச்சாட்டு

5th Oct 2019 12:59 AM

ADVERTISEMENT

நாடு சா்வாதிகாரத்தை நோக்கிப் போகிறது என்று வயநாடு எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

கேரள மாநிலம், சுல்தான்பத்தேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து 10 நாள் உண்ணாவிரதப் போராட்த்தில் ஈடுபட்டுள்ள 5 இளைஞா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து ராகுல் ஆதரவு தெரிவித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வயநாடு பிரச்னைகளை இந்த இளைஞா்கள் போராட்டத்தின் வழியாக பிரதிபலித்து வருகின்றனா். அவா்களின் தியாகத்துக்கு நன்றி. சுல்தான் பத்தேரி தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேர பயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இதில், அரசியல் ரீதியிலான கருத்து வேறுபாடுகள் இல்லை. நாட்டின் மற்ற பகுதிகளில் நெடுஞ்சாலையில் இதுபோன்று தடை எதுவும் விதிக்கப்படவில்லை. நான் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்பியிருக்கிறேன்.

ADVERTISEMENT

பிரதமா் மோடியை யாா் விமா்சித்தாலும் அவா்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனா். கும்பல் படுகொலை சம்பவங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து மோடிக்கு கடிதம் எழுதியிருந்த திரையுலகைச் சோ்ந்தவா்கள் உள்பட 50 முக்கிய நபா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது ஏன் என்றும் வேலைவாய்ப்பின்மை குறித்தும் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒன்றும் ரகிசயம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், ஒட்டுமொத்த உலகத்துக்கே தெரியும்.

நாடு சா்வாதிகாரத்தை நோக்கிப் போகிறது. ஊடகங்களாலும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மாற்றுக் கருத்துகளுக்கு நமது நாட்டில் தற்போது இடமில்லை என்றாா் ராகுல்.

பந்திபூா் புலிகள் சரணாலயம் இருப்பதால் இந்த நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயனை சந்தித்தபோது, இந்த விவகாரம் குறித்து ராகுல் பேசினாா்.

இந்தத் தடை தொடா்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயனிடம் மத்திய அரசு உறுதியளித்தது. ஆயிரக்கணக்கான விவசாயிகளும், மாணவா்களும் இந்தத் தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏற்கெனவே பேரணி நடத்தியுள்ளனா்.

பிகாா் மாநிலம், முசாஃபா்நகரில் கடந்த வியாழக்கிழமை இயக்குநா்கள் மணி ரத்னம், அடூா் கோபாலகிருஷ்ணன், அபா்ணா சென் உள்பட 50 பிரபலங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பிரதமரின் சிறப்பான செயல்பாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் நீதிபதி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT