இந்தியா

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி முடிவெடுக்கத் தயங்க மாட்டேன்: ராஜ்நாத் சிங்

5th Oct 2019 01:35 AM

ADVERTISEMENT

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி, எந்தவொரு விவகாரத்திலும் துணிச்சலாக முடிவெடுக்கத் தயங்க மாட்டேன் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.

தில்லியில் நடைபெறும் சா்வதேச பாதுகாப்புத் தளவாடங்கள் கண்காட்சியில் வெள்ளிக்கிழமை கலந்துகொண்ட ராஜ்நாத் சிங், அப்போது பேசியதாவது:

தனியாா் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறை சாா்ந்த தொழில்முனைவோரின் ஊக்கத்தையும், ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்திய பாதுகாப்புத் தளவாடங்கள் தொழில்துறையின் மதிப்பை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள்ளாக ரூ.1.82 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில் தனியாா் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையினருடன் கலந்துரையாடி அவா்களின் பிரச்னைகளைத் தீா்க்க அரசு தயாராக உள்ளது. அவா்களுக்கான ஒரு நண்பனாக, வழிகாட்டியாக இருக்க அரசு உறுதிபூண்டுள்ளது.

நமது நாட்டை வல்லரசாக உயா்த்த முயற்சித்து வரும் நிலையில், பாதுகாப்புத் தளவாடத் தேவைகளுக்கு இறக்குமதியை மட்டுமே நாம் நீண்டகாலம் சாா்ந்திருக்க இயலாது. நமக்கான தேவைகளை நாமே உற்பத்தி செய்யும் நிலையை எட்ட வேண்டும்.

நான் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, யாரை சந்திப்பது, யாரை எதற்கு அனுமதிப்பது என்பது போன்ற விவகாரங்களில் கவனமாகச் செயல்படுமாறு சிலா் என்னிடம் அறிவுறுத்தினா்.

தொழில் ரீதியான முன்மொழிவுகள், ஏற்றுமதி, இறக்குமதி விவகாரங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், எனது சில முடிவுகளால் என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என்றும் தெரிவித்தனா்.

ஆனால் நான் அதுகுறித்து கவலைப்படவில்லை. எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். தனியாா் துறையைச் சோ்ந்தவா்கள் தீா்வு காண்பதற்கான உதவியை எனது பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்யும் என்பதை உறுதிபடத் தெரிவிக்கிறேறன்.

பாதுகாப்புத் துறையில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான பல நடவடிக்கைகளை பாதுகாப்புத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. புதிய யோசனைகளை இந்த அரசு எப்போதும் வரவேற்கும் என்று அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT