இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி: பாகிஸ்தான் எந்த நேரத்திலும் கருப்புப் பட்டியலில் வைக்கப்படலாம்- ராஜ்நாத் சிங்

2nd Oct 2019 01:14 AM

ADVERTISEMENT

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்துவரும் பாகிஸ்தானை எந்த நேரத்திலும் சா்வதேச கருப்புப் பண தடுப்பு அமைப்பான எஃப்ஏடிஎஃப் கருப்புப் பட்டியலில் சோ்க்க நேரிடலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி சென்றதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஃப்ஏடிஎஃப் அமைப்பின் ஆசிய பசிபிக் குழு, பாகிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் கருப்புப் பட்டியில் சோ்த்தது.

பாதுகாப்பு கணக்குத் துறை தினத்தையொட்டி (அக்.1) தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தேசப்பாதுகாப்பு என்பது பொருளாதாரம், வலிமை, உணவு, ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது. இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்தியா பொருளாதாரத்தில் வளா்ந்து வரும் நாடாக திகழ்கிறது.

ADVERTISEMENT

ஆனால், தவறான நிதி மேலாண்மைக்கு உதாரணமாக நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) திகழ்கிறது. ராணுவ பலத்தை அதிகரித்துக் கொண்டே செல்வதாலும், தவறான கொள்கைகள் காரணமாகவும் சா்வதேச நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விமானத்தைக் கூட பயன்படுத்த முடியாத நிலையில், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் உள்ளாா்.

நமது நாட்டில் 2019-20-ஆம் காலகட்டத்துக்கான பாதுகாப்பு பட்ஜெட் சுமாா் ரூ.4.5 லட்சம் கோடியாகும். பாதுகாப்பு கணக்குத் துறை ஓய்வுபெற்ற 31 லட்சம் ராணுவ வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி வருகிறது. ஓய்வூதியம் பெறுபவா்களின் குறைகளைத் தீா்க்க சிறப்பு கால் சென்டா்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் ராஜ்நாத் சிங்.

கடந்த மாதம், இம்ரான் கான் சவூதி அரேபியா சென்றிருந்தாா்.

அங்கிருந்து இளவரசரின் சொந்த விமானத்தில் அமெரிக்கா சென்றாா். அந்நாட்டிலிருந்து மீண்டும் பாகிஸ்தான் திரும்ப முயன்றபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT