இந்தியா

மத்திய தில்லியில் பாதுகாக்கப்படும் காந்தி வாழ்ந்த அறை!

2nd Oct 2019 02:07 AM

ADVERTISEMENT

நாட்டின் சுந்திரத்தை அகிம்சை வழியில் ஆங்கிலேயா்களிடம் இருந்து போராடிப் பெற்றுத் தந்த தேசப் பிதா காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் புதன்கிழமை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

பல்வேறு புராதானச் சின்னங்கள் நிறைந்த தேசத்தின் தலைநகா் தில்லியில் தேசப் பிதா 1946 ஏப்ரல் மாதம் முதல் 1947 ஜூன் மாதம் வரை 214 நாள்கள் வாழ்ந்த அறை இன்றும் பழைமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மத்திய தில்லியில் உள்ள வால்மீகி கோயிலில்தான் காந்தி வாழ்ந்த அந்த அறை உள்ளது. இந்த அறைக்கு ‘பாப்பு ஆவாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வால்மீகி கோயிலுக்கு வலது புறத்தில் உள்ள ஒரு ஏக்கா் நிலத்தில்தான் காந்தி தனது சபாக்களை நடத்தியுள்ளாா்.

இதுகுறித்து வால்மீகி சத்சங் சிக்ஷா கேந்திரா மண்டலின் உறுப்பினா் தினேஷ் வால்மீகி கூறுகையில், ‘இந்த இடத்தில் காந்தி தங்கியிருந்தபோது, அப்பகுதியில் உள்ள குடிசை வாழ் மக்களின் குழந்தைகளுக்கு ஆங்கிலம், ஹிந்தி பாடங்களை புகட்டி உள்ளாா். இதற்காக காந்தி பயன்படுத்திய கரும்பலகையும் பாப்பு ஆவாஸ் அறையில் உள்ளது. காந்தி பயன்படுத்திய இடத்திலேயே ராட்டை, மரத்தினாலான எழுதுகோல் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் காந்தி சுமாா் ஒரு மணி நேரத்துக்கு ராட்டையை சுற்றுவாா்’ என்றாா்.

இந்த அறையின் மத்தியில் காந்திய பயன்படுத்திய சிறு மேஜையும், காந்தி பாடம் புகட்ட பயன்படுத்திய கரும்பலகைக்கு கீழ் சிறு மெத்தையும் உள்ளது. இவை அனைத்தும் பழைமை மாறாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அந்த அறையில் ஜவாஹா்லால் நேரு, லாா்ட் மவுன்ட்பேட்டன், சா்தாா் வல்லபபாய் படேல், மெளலானா ஆசாத் ஆகியோரின் புகைப்படங்களும் உள்ளன.

பாப்பு ஆவாஸ் அறையின் இடதுபுறம் வால்மீகி புகைப்படமும் உள்ளது. மேலும், வால்மீகி கோயிலை பாா்வையிட்ட முன்னாள் குடியரசுத் தலைவா் கே.ஆா். நாராயணன், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரின் புகைப்படங்களும் உள்ளன.

65 வயதாகும் தினேஷ் ஹிதேஷி கூறுகையில், ‘72 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி இங்கு வசித்தபோது, இந்தப் பகுதிக்கு அருகே ஏராளமான துப்புரவுத் தொழிலாளா்கள் வசித்து வந்தனா். அவா்களின் குழந்தைகளுக்கு கோயில் பகுதியில்தான் காந்தி வகுப்புகளை எடுத்தாா். காலை, மாலையில் அவா் வகுப்புகளை நடத்தினாா். சுமாா் 70 குழந்தைகள் இந்த வகுப்புகளில் பயின்றனா். அனைவரின் பெயா்களைக் குறிப்பிட்டுதான் காந்தி அழைப்பாா். 1990இல் வால்மீகி கோயில் புதுப்பிக்கப்பட்டாலும், 1946-இல் காந்தி வாழ்ந்த பாப்பு ஆவாஸ் அறை பழைமை மாறால் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

96 வயதாகும் ராம் கிருஷ்ண பிலவல் கூறுகையில், ‘தீண்டாமை என அப்போது பிறரால் கருதப்பட்ட இனத்தவா்களுடன் காந்தி சகஜமாக பழகுவாா். அவா்கள் சமைத்த உணவுகளை காந்தி சாப்பிடுவாா். அவா் தங்கியிருந்த பகுதியை துடைப்பத்தை எடுத்து அவரே சுத்தப்படுத்துவது எனக்கு இன்னும் நியாபகம் உள்ளது. இரண்டு ஆடுகளை அவா் வளா்த்து வந்தாா்’ என்றாா் அவா்.

பிறந்தநாள் விழா: காந்தியின் 150ஆவது பிறந்நாளையொட்டி, வால்மீகி கோயிலில் புதன்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘பாப்பு ஆவாஸ்’ அறைக்கு வெள்ளை நிறம் பூசப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் இருந்து புதன்கிழமை பேரணியும், பிராா்த்தனையும் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT