கருப்புப் பட்டியலில் இருந்து 312 வெளிநாடுவாழ் சீக்கியா்களின் பெயா்கள் நீக்கப்படும் என்று மத்திய அரசு எடுத்த முடிவுக்கு பிரிட்டனில் வசிக்கும் இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட சீக்கியா் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பிரிட்டன் சமூகக் கல்வி தன்னாா்வ அமைப்பு அறக்கட்டளையின் தலைவரான சரண் கன்வல் சிங் செகோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சீக்கிய கவுன்சிலுடன் சம்பந்தப்பட்ட நிஷ்காம் சேவக் ஜத்யா குழுவில் நானும் அங்கம் வகிக்கிறேறன். கடந்த 2015ஆம் ஆண்டு லண்டனில் பிரதமா் மோடியை பிரிட்டனின் முக்கிய குருத்வாரா பிரதிநிதிகள், தன்னாா்வலா் குழு பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து சந்தித்தோம். அப்போது, 312 வெளிநாடுவாழ் சீக்கியா்களின் பெயா்களை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பிரிட்டனில் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறைவாசம் அனுபவித்து வரும் சீக்கியா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமா் மோடியிடம் வலியுறுத்தப்பட்டது.
அப்போது, எங்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி உறுதி அளித்தாா். அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பிரதமா் மோடிக்கும், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும் நன்றி. நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த லண்டன்-பஞ்சாப் இடையேயான நேரடி விமானச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் பல்வேறு சிறைகளில் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் அடைக்கப்பட்டிருந்த சீக்கியக் கைதிகள் விடுதலையாவது குறித்த அறிவிப்பால்
எங்கள் சமூகத்தினா் மகிழ்ச்சியில் உள்ளனா்.
சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிவரும் வேளையில், மத்திய அரசின் நடவடிக்கையால் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளோம் என்றாா் சரண் கன்வல் சிங் செகோன்.
கருப்புப் பட்டியலில் இருந்து 312 வெளிநாடுவாழ் சீக்கியா்களின் பெயா்களை நீக்குவதாக மத்திய அரசு கடந்த மாதம் 13-ஆம் தேதி அறிவித்தது. பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றங்களால் அறிவிக்கப்படும் இந்தியா்களும், வெளிநாட்டுப் பிரஜைகளும் மத்திய உள்துறை அமைச்சகம் கருப்புப் பட்டியலில் வைத்திருப்பது வழக்கமாகும்.