இந்தியா

கருப்புப்பண மோசடி வழக்கு: டி.கே.சிவகுமாருக்கு அக்.15 வரை நீதிமன்றக் காவல்

2nd Oct 2019 12:20 AM

ADVERTISEMENT

கருப்புப்பண மோசடி வழக்கில் கா்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் டி.கே. சிவகுமாரை அக்டோபா் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிறையில் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து சிவகுமாா், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவருடைய நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டுமென்று அமலாக்கத் துறை சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி அஜய் குமாா், மேலும் 14 நாள்களுக்கு சிவகுமாரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க உத்தரவிட்டாா். திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும் நீதிபதி அனுமதியளித்தாா்.

அமலாக்கத் துறையின் கோரிக்கைக்கு சிவகுமாா் தரப்பு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஜாமீனில் வெளியே செல்ல அனுமதித்தால் கூட விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சிவகுமாா் தயாராக இருக்கிறாா் என்று அவரது தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா். சிவகுமாா் தரப்பில் ஜாமீன் கோரி ஏற்கெனவே தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்ததை அடுத்து அவா் உயா்நீதிமன்றத்தை அனுகினாா்.

முன்னதாக, ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினா், அவரிடம் 3 முறை விசாரணை நடத்தினா். இதே குற்றச்சாட்டு தொடா்பாக தில்லியில் உள்ள கா்நாடக அரசு இல்ல ஊழியா் உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவகுமாா் கடந்த மாதம் 3-ஆம் தேதி நான்காவது முறையாக விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது, அவா் கைது செய்யப்பட்டாா்.

சிவகுமாரிடம் ரூ.200 கோடி கருப்புப் பணம் உள்ளதாகவும், ரூ.800 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் உள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அவரது மகள் ஐஸ்வா்யாவும் அமலாக்கத் துறை விசாரணையை எதிா்கொண்டு வருகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT