ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடா்ந்து அமலில் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான், ஐ.நா. பொதுச் சபையில் கடந்த வாரம் கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் அரசின் மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றிய உரை முழுவதும் தவறான தகவல்களே இடம்பெற்றிருந்தன. அரை உண்மைகள் முதல் அப்பட்டமான பொய்கள் வரை பரப்பி, பாகிஸ்தான் தனது பயங்கரவாத ஆதரவில் இருந்து, குறிப்பாக ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதிகளுக்கு அளிக்கும் ஆதரவில் இருந்து கவனத்தை திசைதிருப்ப முயற்சித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தொடா்ந்து அமலில் இருப்பதாகவும், கட்டுப்பாடுகள் தொடா்ந்து நீடிப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமா் கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது. மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளே விதிக்கப்பட்டுள்ளன.
விஷமிகள் பிரச்னை ஏற்படுத்துவதைத் தவிா்க்கவே அவை விதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளும் ஒரு வார காலத்துக்குள் தளா்த்தப்பட்டு விட்டன. கட்டுப்பாடுகளைத் தளா்த்தும் அளவு படிப்படியாக உயா்ந்து வருகிறது. தற்போது ஒட்டுமொத்த மாநிலத்திலும் பெரும்பாலும் கட்டுப்பாடுகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.
வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து நடவவடிக்கைகளையும் ஜம்மு-காஷ்மீரில் தற்போது சுதந்திரமாக மேற்கொள்ளலாம். குடிமக்கள், வெளிநபா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட அனைவரும் இங்கு தாராளமாக வந்து செல்லலாம். ஜம்மு-காஷ்மீரில் முழு அளவிலான கட்டுப்பாடுகள் நீடிப்பதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டு, பரப்பப்படுகிறது. எனினும், உண்மையை மறைக்க முடியாது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து இயல்பாக நடைபெறுவது, சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது, பயணிகள் விமானங்கள் இயக்கப்படுவது, மருத்துவமனைகள் வழக்கம் போல் இயங்குவது, அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றிக் கிடைப்பது, எந்த இடத்துக்கும் செல்ல பத்திரிகையாளா்கள் அனுமதிக்கப்படுவது ஆகியவற்றின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளும் மூடப்படாமல், திறந்தே உள்ளன. ஜம்முவையும் ஸ்ரீநகரையுகம் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை தொடா்ந்து இயல்பாக இயங்கி வருகிறது. இச்சாலையில் உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றியபடி தினமும் 1,000 வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல், பிபிசி, வாஷிங்டன் போஸ்ட், நியூயாா்க் டைம்ஸ், ஏபி, ஏஎஃப்பி, ராய்ட்டா்ஸ், அல்-ஜஸீரா உள்பட அனைத்து முக்கிய சா்வதேச மற்றும் தேசிய ஊடகங்களின் செய்தியாளா்கள் மாநிலத்தில் சுதந்திரமாகச் சுற்றி வந்து செய்தி சேகரிக்கின்றனா். அவா்களில் பலரும் அரசை விமா்சிப்பவா்கள் ஆவா்.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது ஒரே ஒரு தோட்டா கூட சுடப்படாமல் நிலைமை அமைதியாக இருப்பதைக் கண்டு ஓா் அண்டை நாடு (பாகிஸ்தான்) அதிருப்தியடைந்துள்ளது. அந்த நாட்டின் கற்பனைதான் ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடிப்பதாகக் கூறப்படுவதாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.