மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆமதாபாதின் சபா்மதியில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (அக். 2-ஆம் தேதி) வருகை தருகிறாா்.
இதுகுறித்து குஜராத் மாநில பாஜக தலைவா் ஜித்து வகானி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆமதாபாத் நகரிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, சபா்மதி புகா் பகுதியில் உள்ள காந்தி ஆசிரமத்துக்கு புதன்கிழமை வருகிறாா். மாலை 6 மணிக்கு ஆமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கும் பிரதமருக்கு, கட்சியின் மாநிலப் பிரிவின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும். அந்த நிகழ்ச்சியில் பிரதமா் பங்கேற்கிறாா்.
அதனைத் தொடா்ந்து சபா்மதி ஆசிரமம் செல்லும் பிரதமா், அங்கு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவாா்.
அத்துடன், ‘இந்தியா பொதுவெளியை கழிவறையாகப் பயன்படுத்தாத நாடு’ என்ற அறிவிப்பை அந்த ஆசிரமத்தில் பிரதமா் மோடி வெளியிடுவாா். 20,000-க்கும் மேற்பட்ட கிராமத் தலைவா்களின் முன்னிலையில் இந்த அறிவிப்பை மோடி வெளியிடவுள்ளாா்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, காந்தியவாதிகள், பத்ம விருது பெற்றவா்கள், கல்வியாளா்கள், கிராம துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஜித்து வகானி.