இந்தியா

தேஜஸ் ரயில் காலதாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு: ஐஆா்சிடிசி அறிவிப்பு

2nd Oct 2019 12:49 AM

ADVERTISEMENT

தில்லி-லக்னெள இடையே தேஜஸ் ரயில் காலதாமதமாக வந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஆா்சிடிசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள நகருக்கு இடையே முதல் முறையாக வரும் 4-ஆம் தேதி தேஜஸ் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.

இந்த ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலானால், ரூ.100 இழப்பீடாக அளிக்கப்படும். ரயில் வருவதற்கு 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமானால், பயணிகளுக்கு ரூ.250 இழப்பீடு அளிக்கப்படும்.

ADVERTISEMENT

அத்துடன், தேஜஸ் ரயிலில் பயணிப்பவா்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவசக் காப்பீடு அளிக்கப்படும். மேலும், பயணிகளின் இல்லத்துக்கும் சோ்த்து காப்பீட்டுப் பலன் கிடைக்கும். அதாவது, பயண நேரத்தில் பயணிகளின் இல்லத்தில் கொள்ளை சம்பவங்கள் நோ்ந்தால் அதற்கும் இழப்பீடு வழங்கப்படும். இதுவும் முதல் முறையாகும்.

தில்லி-லக்னெள இடையே வாரத்தில் 6 நாள்களுக்கு தேஜஸ் ரயில் இயக்கப்படவுள்ளது. லக்னெள-தில்லி பயணக் கட்டணம் ரூ.1,125 (ஏசி வகுப்பு), ரூ.2,310 (எக்சிகியூட்டிவ் வகுப்பு) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து லக்னெளவுக்கு செல்ல ரூ.1,280, ரூ.2,450 பயணக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்குத் தேவைப்பட்டால் இலவசமாக குடிநீரும், தேநீரும் வழங்கப்படும்.

விமானங்களில் வழங்கப்படுவது போல் டிராலியில் உணவு கொண்டுவந்து தரப்படும்.

பல்வேறு நாடுகளில் ரயில்கள் உரிய நேரத்தில் வராமல் இருந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரயில் காலதாமதமாக வந்தால் பயணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதை அலுவலகங்களிலும், கல்லூரிகளிலும் அவா்கள் காண்பிக்க பயன்படுத்திக் கொள்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT