இந்தியா

தென்மேற்குப் பருவ மழை நிறைவு! 10 ஆயிரம் மி.மீ. மழையைச் சந்தித்த ஊர் இதுதான்!!

1st Oct 2019 03:04 PM

ADVERTISEMENT


தென்மேற்குப் பருவ மழை தனது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 30ம் தேதி தென்மேற்குப் பருவ மழை நிறைவு பெறும்.

இந்த காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் அதிக மழை பதிவானது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பதிவில் புள்ளி விவரத்தோடு பதிவு செய்துள்ளார்.

அதில்..

தென்மேற்குப் பருவ மழை முடிவுக்கு வர உள்ளது. ஜூன் மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை அதிக மழைப் பொழிவை சந்தித்த பகுதிகளைப் பற்றி பார்க்கலாம்.

ADVERTISEMENT

மேலும் படிக்க: அக். 20-இல் வடகிழக்குப் பருவ மழை தொடக்கம்?

மகாராஷ்டிர மாநிலம் மஹாபலேஷ்வர் அருகே உள்ள லமஜ் என்ற பகுதியில் இந்த தென்மேற்குப் பருவ மழை காலத்தில் 10 ஆயிரம் மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வெகு நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பகுதியில் 10 ஆயிரம் மி.மீ. மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

குடகு பகுதியில் தலைக்காவிரியில் மட்டும் 6,600 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நலடி, பகமண்டலா பகுதிகளில் 6000 மி.மீ. மழை பெய்துள்ளது.

ஆனால், கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து எந்த ஒரு பகுதியும் இந்த டாப்பர்ஸ் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகபட்ச மழைப் பொழிவை அனுபவித்த பகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

அது ஒரு நீண்ட பட்டியல்தான்.. பரவாயில்லை.. பாருங்கள்.
1. லமஜ் - மகாராஷ்டிரா - 10,790 மி.மீ.
2. தம்ஹினி - மகாராஷ்டிரா - 9,635 மி.மீ.
3. அம்போலி - மகாராஷ்டிரா - 9544 மி.மீ.
4. பதர்பூஞ்ச், மகாராஷ்டிரா - 9514 மி.மீ.
5. அமகோன், கர்நாடகா - 9,193 மி.மீ.
6. ஷிர்கோன் (முல்ஷி), மகாராஷ்டிரா - 9,170 மி.மீ.
7. டபோலா, மகாராஷ்டிரா - 8,816 மி.மீ.
8. ஜோர், மகாராஷ்டிரா - 8,728 மி.மீ.
9. தவாடி, மகாராஷ்டிரா - 8,720 மி.மீ.
10. கவாலி, கர்நாடகா - 8,549 மி.மீ.

இந்த பட்டியலைப் பார்க்கும் போதே தெரிந்து விடும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்கள்தான் இந்த தென்மேற்குப் பருவ மழையின் டாப்பர்கள் என்று. 

பிறகு இந்தியாவில் அதிக மழைப் பொழிவு இருக்கும் பகுதி என்றால் சிரபுஞ்சி என்று சொல்லிக் கொடுத்து பழகிவிட்டோமே, அதன் நிலை என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?

அதிக மழைப் பொழிவு பட்டியலில் 22வது இடத்தில் இருக்கிறது நீங்கள் கேட்ட சிரபுஞ்சி. மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சியில் 7,208 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

சரி, இதேக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் அதிக மழைப் பொழிவு இருந்த இடங்களைப் பார்க்கலாமா?

1. திருத்தணி - 931 மி.மீ.
2. தர்மபுரி - 763 மி.மீ.
3. வேலூர் - 748 மி.மீ.
4. சேலம் - 732 மி.மீ.
5. சென்னை விமான நிலையம் - 689 மி.மீ.
6. பூண்டி - 588 மி.மீ.
7. திருப்பத்தூர் - 541 மி.மீ.
8. கடலூர் - 512 மி.மீ.
9. சென்னை நகரம் - 493 மி.மீ.
10. தஞ்சாவூர் - 443 மி.மீ.
11. கன்னியாகுமரி - 440 மி.மீ. (215 மி.மீ. அதிக மழை)
12. நாகப்பட்டினம் - 435 மி.மீ.
13. திருச்சி விமான நிலையம் - 367 மி.மீ.
14. மதுரை விமான நிலையம் - 344 மி.மீ.
15. கோவை விமான நிலையம்  - 247 (93 மி.மீ. அதிகம்) என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த தென்மேற்குப் பருவ மழைக் காலத்தை சந்திக்க 2020 வரை காத்திருப்போம். உலகின் வேறு எங்குமே இதுபோன்று மிகக் குறுகிய காலத்தில் அதிக மழையை எதிர்பார்க்கவே முடியாது. மேற்கு தொடர்ச்சி மலைப் தொடர் இயற்கையின் கொடை என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT