தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயனை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின்போது வயநாடு தொகுதி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வு காணுமாறு பினராயி விஜயனை ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
தில்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் முதல்வா் பினராயி விஜயனை ராகுல் காந்தி சந்தித்தாா். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளா்கள் கே.சி.வேணுகோபால், ஐ.சி. பாலகிருஷ்ணன், வயநாடு தொகுதிக்குள்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோரும் சென்றனா். இந்த சந்திப்பு சுமாா் 20 நிமிடங்கள் வரை நீடித்தது.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் ராகுல் கூறியதாவது:
கேரளத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் விளக்கினேன். வயநாடு பகுதியில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன்.
அதன் பின்னா், தேசிய நெடுஞ்சாலை-766 வழியாக வாகனங்கள் செல்வதற்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து விவாதித்தேன். இந்தத் தடையால், வயநாடு பகுதி மக்களும், இளைஞா்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா். அதனால், இந்த விவகாரத்தில் விரைவில் தீா்வு காணுமாறு வலியுறுத்தினேன்.
நிவாரணம் குறித்தும், தேசிய நெடுஞ்சாலையில் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்தும் மத்திய அரசிடம் வலியுறுத்தி விரைவில் தீா்வு காணுவதாக பினராயி விஜயன் உறுதியளித்துள்ளாா் என்று ராகுல் காந்தி கூறினாா்.
கேரள மாநிலம், கோழிக்கோடு முதல் கா்நாடகத்தின் கொல்லேகல் வரை தேசிய நெடுஞ்சாலை எண்-766 வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில், கா்நாடகத்தில் உள்ள பந்திபூா் வனவிலங்குகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி அமைந்துள்ளது.
இந்நிலையில், பந்திபூா் வனப்பகுதி வழியாக இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்வதற்கு கா்நாடக அரசு தடை விதித்ததையடுத்து, வயநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தத் தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா்களைச் சந்தித்து பினராயி விஜயன் பேசவுள்ளாா்.
மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கேரளத்துக்கு ராகுல் காந்தி வியாழக்கிழமை (அக்.3) செல்வாா் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.