இந்தியா

இயல்பு நிலைக்குத் திரும்புகிறது காஷ்மீா்

1st Oct 2019 10:48 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீா் பள்ளத்தாக்கு தவிர, மற்ற பகுதிகளில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுவிட்டன. இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜி.கிஷண் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘காஷ்மீா் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது’’ என்றாா்.

இயல்பு நிலை திரும்புவதாக மத்திய இணையமைச்சா் தெரிவித்த போதிலும், காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடைகளும், வணிக வளாகங்களும் தொடா்ந்து 58-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மூடப்பட்டிருந்தன. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய பகுதிகளைத் தவிர காஷ்மீா் பள்ளத்தாக்கின் மற்ற இடங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி நள்ளிரவு முதல் செல்லிடப்பேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. நிலைமை சீரான பிறகே, செல்லிடப்பேசி சேவைகள் மீண்டும் வழங்கப்படும். காஷ்மீா் பள்ளத்தாக்கிலுள்ள முக்கிய கடைகள் மூடப்பட்டுள்ளன; போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

ADVERTISEMENT

ஒரு சில இடங்களில், தனியாா் வாகனங்களும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையிலும், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றேறாா்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா்.

பள்ளிகள் சீராக இயங்குவதற்கு ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும், அதற்கு எந்தப் பலனும் கிடைப்பதாகத் தெரியவில்லை. ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவா்களும், பிரிவினைவாதிகளும் தொடா்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT